குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை.. செப்டம்பரில் ரிசல்ட்.. நம்பிக்கை தரும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்
டெல்லி: குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடைபெற்று வருகின்றன; இதன் முடிவுகள் செப்டம்பரில் கிடைக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் படுதீவிரமாகவும் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதனிடையே 2 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே 6 வயது முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு 2- வது தவணையாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி சோதனை முயற்சியாக போடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி சோதனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட உள்ளது.
இது தொடர்பாக ஏ.என்.ஐ, செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகளின் முடிவுகள் செப்டம்பரில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
