ஒரே மாதத்தில் 90.3 லட்சம் கேஸ்கள்.. 1.20 லட்சம் பேர் பலி.. இந்தியாவை கலங்கடித்த மே மாதம்.. அதிர்ச்சி
டெல்லி: இந்தியாவில் கடந்த மே மாதம் கொரோனா பரவலின் மிக மோசமான மாதமாக இருந்துள்ளது. மே மாதத்தில்தான் இந்தியாவிலேயே அதிக கொரோனா கேஸ்கள், கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.
இந்தியா கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் தீவிரம் அடைந்த இரண்டாம் அலை, மே மாதம் உச்சம் தொட்டது. முக்கியமாக தினசரி கேஸ்கள் மே மாதம் 4 லட்சத்திற்கும் அதிகமாக சென்றது.
அதேபோல் தினசரி பலி எண்ணிக்கை கடந்த மே மாதம்தான் 4 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே இந்தியாவில் மிக மோசமான மாதம் என்றால் அது கடந்த மே மாதம்தான்.

மோசம்
இந்தியாவில் கடந்த மே மாதத்தில் பதிவான மரணங்கள் மற்றும் புதிய கேஸ்களின் எண்ணிக்கைதான் உலகிலேயே ஒரே மாதத்தில் பதிவான அதிக கேஸ்கள் ஆகும். இந்தியாவில் கடந்த மே மாதம்தான் உலகிலேயே மிக மோசமான கொரோனா மாதம் ஆகும். இந்தியாவில் கடந்த மே மாதம் 90.3 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவானது.

1 கோடி
கிட்டத்தட்ட 1 கோடிக்கு இணையான கேஸ்கள் பதிவாகி உள்ளது. உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும். அதற்கு முன் ஏப்ரல் மாதம் 69.4 லட்சம் கேஸ்கள் இந்தியாவில் பதிவானது. மே மாதம் பதிவான கேஸ்கள் ஏப்ரல் மாதம் பதிவான கேஸ்களை விட 69.4 லட்சம் அதிகம் ஆகும்.

மரணம்
அதேபோல் கடந்த மே மாதம் இந்தியாவில் 1.20 லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர். கடந்த ஏப்ரலில் 48768 லட்சம் பேர் மட்டுமே பலியான நிலையில் மே மாதம் இரண்டரை மடங்கு அதிக மரணம் நிகழ்ந்துள்ளது. உலகிலேயே இதுதான் ஒரே மாதத்தில் பதிவான அதிக கொரோனா மரணம் ஆகும்.

உண்மை
ஆனால் உண்மையான கொரோனா பலி எண்ணிக்கை இந்தியாவில் கடந்த மே மாதம் இதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த போது இதே அளவு கேஸ்கள் பதிவானது. அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 99680 மரணங்கள் நிகழ்ந்தன. அதேபோல் கடந்த வருடம் டிசம்பரில் 83849 மரணங்கள் பதிவானது. பிரேசிலில் 2021 ஏப்ரலில் 82401 மரணங்கள் பதிவானது.

அதிகம்
இதை எல்லாம் விட அதிகமாக இந்தியாவில் ஒரே மாதத்தில் 1.20 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா கடந்த 2020 டிசம்பரில் உக்கிரமாக இருந்தது. அங்கு 65.3 லட்சம் கேஸ்கள் பதிவானது. ஆனால் அதைவிட மிக மோசமாக இந்தியாவில் ஒரே மாதத்தில் 90. 3 லட்சம் கேஸ்கள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறைந்துள்ளது
ஆனால் மே மாதத்தில் கடைசி 10 நாட்கள் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் சரிந்தது. தினசரி கேஸ்கள் 4 லட்சத்தில் இருந்து 1.3 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 9ல் 1.5 லட்சம் கேஸ்கள் ஒரே நாளில் பதிவானது. அதன்பின் 54 நாட்கள் கழித்து அதைவிட குறைவான கேஸ்கள் ஒரே நாளில் பதிவாகி உள்ளது. தினசரி மரணங்கள் இந்தியாவில் 2500க்கும் கீழ் சென்றுள்ளது.

ஏப்ரல் 22
ஏப்ரல் 22க்கு பின் மிக குறைவான ஒருநாள் பலி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகி உள்ளது. இந்தியாவில் தற்போது வரை 28,175,044 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 1,895,506 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 25,947,629 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 331,909 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
