கடந்த முறை தப்லீக் ஜமாத்.. இப்போது ராகுல் காந்தி.. சுவாமி சக்ரபாணி ஆவேசம்.. கெஜ்ரிவாலுக்கு அட்வைஸ்
டெல்லி: கடந்த முறை தப்லீக் ஜமாத் மாநாடு கொரோனாவை பரப்பி விட்டது போல தற்போது ராகுல் காந்தி தனது யாத்திரை மூலம் அதை செய்கிறார் என்று அகில பாரத இந்து மகாசாபா அமைப்பின் தேசிய தலைவர் சக்ரபானி மகாராஜ் விமர்சித்து இருக்கிறார்.
சீனாவில் புதிய வகை ஓமிக்ரான் வேரியண்ட்டான பிஎப் 7 வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.
சுடுகாடுகளிலும் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் 4 பேருக்கு கொரோனா
அதோடு அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் உலக நாடுகள் தற்போதே உஷார் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. சீனாவை நடுங்க வைக்கும் மாறுபாடு அடைந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபோக பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளது.

ராகுல் காந்திக்கு கடிதம்
இதற்கிடையே, ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் இல்லையென்றால் நடைபயணத்தை ரத்து செய்து விடுங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும் ராகுல் காந்தி இன்று வழக்கம் போல் தனது யாத்திரையை ஹரியானா மாநிலத்தில் நடத்தி வருகிறார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை விரைவில் டெல்லி வர உள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை கிடையாது
இந்த நிலையில், ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அகில பாரத இந்து மகாசாபா அமைப்பின் தேசிய தலைவர் சக்ரபானி மகாராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாடு முழுவதும் முன்பு தபிலீக் ஜமாத் கொரோனாவை பரப்பிவிட்டது. இந்த முறை ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரை மூலமாக அந்த வேலையை செய்கிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. ராகுல் காந்தியின் யாத்திரை ஒரு கோவிட் யாத்திரை அது பாரத் ஜோடோ யாத்திரை கிடையாது. ராகுல் காந்திக்கு பொறுப்பற்ற தலைவராகவும் அக்கறையற்றவராகவும் இருக்கிறார். சீனா, அமெரிக்க என உலகம் முழுவதும் கொரோனா பரவுகிறது" என்றார்.

தப்லீக் ஜமாத்
இந்தியாவில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. அப்போது டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் தப்லீக் ஜமாத் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது நாடு முழுவதும் கொரோனா வைரசை பரப்பி விட்டதாக தப்லீக் ஜமாத் மீது ஒருதரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர். கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் அமைப்பும் ஒரு காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலிலும் கூட கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications