பாஜகவுக்கு தேர்தலில் நெருக்கடியாக மாறும் வேலைவாய்ப்பின்மை? சிஎஸ்டிஎஸ் கணிப்பு சொல்வது என்ன
டெல்லி: நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது நாட்டில் வேலைவாய்ப்பின்மை தான் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளதாக சிஎஸ்டிஎஸ் சர்வேயில் தெரிய வந்துள்ளது.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கிறது. மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதன் காரணமாக அனைத்து கட்சியினரும் மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

புதிய சர்வே: இதற்கிடையே லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், சிஎஸ்டிஎஸ் எனப்படும் சென்டர் பார் ஸ்டேடி ஆஃப் டெவலபிங் சோசைட்டி என்ற அமைப்பு இந்தியா வாக்காளர்களின் முக்கியமான பிரச்சினைகளாக என்ன இருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறம் கிராமப்புறம் என நாடு முழுக்க எடுக்கப்பட்ட விரிவான ஒரு ஆய்வாக இது இருக்கிறது.
வேலைவாய்ப்பின்மை: இந்த ஆய்வில் கிராமங்கள், டவுன்கள் மற்றும் நகரங்கள் என பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களில் சுமார் 62 சதவீதம் பேர் வேலை கிடைப்பதே மிகப் பெரியா சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 65 சதவீத ஆண்கள் வேலை கிடைக்க மிகவும் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பெண்களில் 59 சதவிகிதம் பேர் மட்டுமே வேலை கிடைப்பதில் சவால் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதில் வெறும் 12 சதவீதம் பேர் மட்டுமே வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வேலை கிடைப்பதில் உள்ள சிரமம் இருப்பதாக அனைத்து மதத்தினருமே தெரிவித்துள்ளதையே இந்த சர்வே முடிவுகள் காட்டுகிறது.. சிரமம் என்று சொன்னவர்களில் 67 சதவீதம் பேர் முஸ்லிம்கள், 63 சதவீத பேர் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். 59 சதவீதம் பட்டியலினத்தவரும் இதே பதிலைச் சொல்லி இருக்கிறார்கள். உயர் சாதியிலும் கூட 57 சதவீதம் பேர் வேலை வாங்குவது கடினம் என்றே கூறியுள்ளனர். 17 சதவீதம் பேர் மட்டுமே வேலை ஈஸியாக கிடைப்பதாகக் கூறியுள்ளனர்.
மத்திய அரசு காரணம்: வேலை வாய்ப்பு போதியளவில் இல்லாமல் இருக்க யார் பொறுப்பேற்க வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதில் சுமார் 21 சதவீதம் பேர் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் 17 சதவீதம் பேர் மாநில அரசுகள் என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 57 சதவீதம் பேர் இரு அரசுகளும் பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
யாருக்கு வேலை இல்லை: நமது நாட்டில் வேலையின்றி இருப்பவர்களில் சுமார் 80% பேர் இளைஞர்கள் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சர்வே ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், இப்போது சிஎஸ்டிஎஸ் அமைப்பும் கிட்டதட்ட அதை முடிவைக் கொடுத்துள்ளது. நமது நாட்டில் வேலையின்றி இருக்கும் இளைஞர்களில் இடைநிலைக் கல்வி அல்லது அதற்கு மேல் படித்தவர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 35.2%ஆக இருந்த நிலையில், 2022இல் 65.7 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அது கூறியிருக்கிறது.
பட்டதாரி இளைஞர்களிடையே தான் வேலைவாய்ப்பின்மை அதிகம் இருக்கிறதாம். குறிப்பாகப் பட்டம் பெற்ற பெண்களிடையே தான் வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருக்கிறது. வேலை, கல்வி அல்லது பயிற்சியில் ஈடுபடாத பெண்கள் 48.4 சதவீதமாக இருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications