இலவசங்கள் முக்கியமான பிரச்சனை- விவாதங்கள் தேவை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா
டெல்லி: இலவசங்கள் என்பது மிகவும் முக்கியமான பிரச்சனைநாட்டின் நலன் கருதி இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் தேவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.
இலவசங்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கும் கட்சிகளுக்கு எதிராக பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஏற்கனவே இணைத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக தரப்பும் இடையூட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. திமுக தமது மனுவில் இலவசங்கள் பொதுமக்களின் முன்னேற்றத்துக்கு எப்படி உதவி இருக்கிறது என விவரித்துள்ளது.

இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா,
இலவசங்களை வழங்குதல் என்பது மிக முக்கியமான ஒன்று. இது தொடர்பாக விவாதங்களும் தேவை. இலவசங்களை மாநில அரசுகள் வழங்கக் கூடாது என மத்திய அரசு தடை விதிக்கிறது எனில் அதை ஆய்வு செய்ய முடியாது என நீதித்துறை சொல்ல முடியாது.
மக்கள் நலத் திட்டங்கள், இலவசங்கள் இரண்டுக்குமான வேறுபாட்டை அடையாளம் காண வேண்டும். வாக்குறுதிகள் என்பது இலவசத்தில் வருமா? மக்கள் நலத் திட்டத்தின் கீழ் வருமா? என்பது வரையறுக்கப்பட வேண்டும்.
தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன? பணம் எங்கிருந்து வருகிறது? தேர்தல் காலங்களில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தேர்தல் ஆணையம் ஏன் ஒழுங்குபடுத்தக் கூடாது? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டாலே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடுகிறதுதானே? அப்படியான நிலையில் இலவச வாக்குறுதிகளை ஏன் தேர்தல் ஆணையம் ஒழுங்குபடுத்த முடியாமல் போகும்?
மாநில அரசின் இலவச திட்டங்களால் கிராமப்புற மக்களுக்கு பலன் கிடைக்கிறது. ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன; சில மாநிலங்கள் சைக்கிள்களை வழங்குகின்றன; கால்நடைகள் வழங்குகின்றன. மீனவர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவை மாணவர்கள், ஏழை மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த உவுகின்றன.இவை நலத் திட்டங்கள். இலவசங்களை வழங்குதல் என்பது ஒரு சிக்கலான விவகாரம். இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.












Click it and Unblock the Notifications