பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா.. மக்களவையில் இன்று விவாதம்! ஓரணியில் ஆளுங்கட்சி -எதிர்க்கட்சிகள்
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்த நிலையில் இன்று அது விவாதிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், மீண்டும் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட உள்ளதாக மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் திங்கட்கிழமை தொடங்கியது.

5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி நிறைவடைகிறது. திங்கட்கிழமை பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால சிறப்புகள், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை, நிகழ்வுகளை பட்டியலிட்டார்.
அவரை தொடர்ந்து அனைத்துக்கட்சி எம்பிக்கள் 75 ஆண்டுகால நாடாளுமன்றத்தின் வரலாற்றை பேசினார்கள். நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், சுமார் 27 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது.
இந்த சிறப்புக் கூட்டத் தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பிரியா விடை கொடுத்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று மதியம் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது.
அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது புதிய நாடாளுமன்றத்தில் தன்னுடைய முதல் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திங்கட்கிழமை கேபினட் ஒப்புதல் அளித்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு அனைத்து கட்சி எம்பிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த மசோதாவை சுற்றி பல ஆண்டுகளாக எண்ணற்ற விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்து இருக்கின்றன. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் முந்தைய காலங்களில் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
பல முறை வாஜ்பாய் ஆட்சியின்போது இந்த மசோதா கொண்டு வரப்பட்டும், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகம் இல்லாத காரணத்தால் அது நிறைவேறாத கனவாக இருந்து வந்தது. மகளிர் உரிமையை நிறைவேற்றவும், அவர்களுடைய சக்தியை பல்வேறு நற்செயல்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்." என்று தெரிவித்தார்.
இன்று இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற உள்ளது. இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்து மாநிலங்களவை விவாதத்திற்கு செல்லும். மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பு நடத்தி இந்த மசோதா வெற்றிபெற்றால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாகும்.












Click it and Unblock the Notifications