"இன்னும் எத்தனை தலைமுறைகள் காத்திருக்கணும்?" மீண்டும் தாமதமான மகளிர் இடஒதுக்கீடு மசோதா! என்ன நடந்தது
டெல்லி: வரலாற்றுச் சிறப்புமிக்க இரவாக அமையவேண்டிய ஒரு நாள், பல தலைமுறைகளாக இந்தியப் பெண்கள் காத்திருந்த பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஒரு முக்கியமான படியாக மாறியிருக்க வேண்டும். ஆனால், அதுவே பெண்களுக்கு உண்மையாக முன்னேற யார் விரும்புகிறார்கள், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள யார் இன்னும் தயங்குகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு இரவாக முடிவடைந்தது.
நேற்று ஏப்ரல் 17ம் தேதி அரசியல் சாசனத்தின் 131வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற லோக்சபா தவறியது. இந்த மசோதா 2029 முதல் நாடாளுமன்ற இடங்களை விரிவுபடுத்தி, மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரியது. தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால், அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதாக்களும் வாபஸ் பெறப்பட்டன.

நாடாளுமன்றம்
ஏப்ரல் 17ம் தேதி, மக்களவையில் அரசியல் சாசன (131வது திருத்த) மசோதா, 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதன் நோக்கம் தெளிவாக இருந்தது.. மக்களவை இடங்களை 543ல் இருந்து 815ஆக உயர்த்த வேண்டும்.. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும்.. மேலும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களை அகற்றாமல் 2029 முதல் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் ஆகியவையே இதன் நோக்கமாகும்.
இது பல ஆண்டுகளாகக் கூறப்பட்ட அனைத்து காரணங்களுக்கும் தீர்வாக இருந்தது. இதன் பின்னால் உள்ள தர்க்கம் எளிமையானது மற்றும் அரசியல் ரீதியாக உணர்வுப்பூர்வமானது.. அதிக இடங்கள் என்றால் அதிக பேரை உள்ளடக்க முடியும் என்பது தான்.. இது தற்போதுள்ள பிரதிநிதிகளை வெளியேற்றாமல் பெண்கள் நாடாளுமன்றத்திற்கு வர வழிவகுக்கும். இது பல ஆண்டுகளாகக் கூறப்பட்ட பொதுவான சாக்குப்போக்குகளை நீக்கியது. இருப்பினும், வாக்குப்பதிவு முடிந்தபோது, அது தேவையான ஆதரவைப் பெறத் தவறிவிட்டது.
தோல்வி
இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிர்த்து 230 பேர் வாக்களித்தனர். இது பெரும்பான்மையைப் பெற்ற போதிலும், அரசியல் சாசன திருத்தத்திற்குத் தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவில்லை. அவையில் 528 உறுப்பினர்கள் இருந்திருந்தால், சுமார் 352 வாக்குகள் தேவைப்பட்டிருக்கும். அந்தளவுக்கு வாக்குகள் வராததால் இந்த அரசியல் சாசன திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து மத்திய அரசு இது தொடர்புடைய இரண்டு மசோதாக்களையும் வாபஸ் பெற்றது. ஒரு மைல்கல்லாக அமைந்திருக்க வேண்டியது மற்றொரு தாமதமாக மாறிப் போனது.
வரலாறு என்ன
இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல.. நீண்ட மற்றும் சங்கடமான ஒரு போக்கின் தொடர்ச்சியாகவே உள்ளது.. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா முதன்முதலில் 1996ல் எச்.டி. தேவகவுடா அரசின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அறிக்கை வந்தபின், அரசே கவிழ்ந்தது, மசோதா காலாவதியானது. இதுவே ஒரு நிரந்தர தாமதத்தின் வடிவமாக மாறியது.. அடுத்த 18 ஆண்டுகளுக்கு இந்த தாமதமே தொடர்ந்தன.
1998 முதல் 2003 வரை, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற நான்கு முறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஒவ்வொரு முறையும், எதிர்ப்பு பாஜகவிடம் இருந்து வரவில்லை.. மாறாக இன்று காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளிடம் இருந்து வந்தது. சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைத்தது. ராப்ரி தேவி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், "முதலில் ஓபிசி ஒதுக்கீடு, பெண்கள் காத்திருக்கலாம்" என்ற அதே வாதத்துடன் மீண்டும் மீண்டும் எதிர்த்தது.
1998ல் நிலைமை அதிர்ச்சியூட்டும் அளவுக்குச் சென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தள எம்பி சுரேந்திர பிரகாஷ் யாதவ், நாடாளுமன்றத்திலேயே பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கிழித்தெறிந்தார். இது ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இது பெண்கள் பிரதிநிதித்துவத்தின் மீதான அப்பட்டமான அவமதிப்பு. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மசோதா தாமதமானது.
காங்கிரஸ் அரசு
பின்னர் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அந்த காலகட்டத்தில், மசோதாவை நிறைவேற்றத் தேவையான எண்ணிக்கையும், அதிகாரமும் அவர்களிடம் இருந்தன. 2010ல், மாநிலங்களவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டாட்டத்துடனும், உறுதிமொழி அறிவிப்புகளுடனும் நிறைவேற்றப்பட்டது. நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வருவதற்கான ஒரு முக்கிய படியாக இது முன்வைக்கப்பட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், அதன்பின் நடந்தவை வேறுவிதமாக இருந்தன.
இந்த மசோதா மக்களவையில் ஒருபோதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. நான்கு ஆண்டுகளில் ஒரு முறைகூட அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆதரவுக்குத் தேவையான நம்பர்கள் இருந்தன; வாய்ப்பும் இருந்தது, ஆனால் அரசுக்கு விருப்பம் இல்லை. அப்போது கூட்டணி நிர்ப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன. பெண்கள் அதிகாரம் வழங்குவது முன்னுரிமையாக இல்லாமல் போனது. 2010 விவாதத்தின் போது, அப்போது காங்கிரஸின் முக்கிய கூட்டணிக் கட்சியான முலாயம் சிங் யாதவ், பெண் எம்பிக்களுக்கு எதிராக இழிவுபடுத்தும் கருத்துக்களைக் கூறியதோடு, கடும் எதிர்ப்பையும் பதிவு செய்தார். காங்கிரஸிற்கு எண்ணிக்கை இருந்தபோதிலும், மௌனம் காத்தது. அந்த மௌனம் தற்செயலானது அல்ல. அது ஒரு திட்டமிட்ட அரசியல் தேர்வு.
முரண்பாடு
இன்றும் அந்த முரண்பாடு தெளிவாக உள்ளது. பெண்கள் உரிமைகளைப் பற்றிப் பேசும் காங்கிரஸின் வரலாறு வேறுவிதமான கதையைச் சொல்கிறது. ஷா பானு வழக்கு அதன் மிகத் தெளிவான தோல்விகளில் ஒன்றாகும். விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பழமைவாத குரல்களின் அழுத்தத்தால் ரத்து செய்யப்பட்டது. ராஜீவ் காந்தியின் அரசு நீதியை விடச் சமரசத்தைத் தேர்ந்தெடுத்தது, முஸ்லிம் பெண்களை ஆதரவின்றி விட்டுச்சென்றது. அதேநேரம் நரேந்திர மோடி அரசு உடனடி முத்தலாக்கைத் தடை செய்து.. எண்ணற்ற பெண்களுக்குக் கண்ணியத்தை மீட்டெடுத்தபோதுதான், அந்த அநீதி பல தசாப்தங்களுக்குப் பிறகுச் சரி செய்யப்பட்டது. இருப்பினும், இன்றும் அதே அரசியல் கட்சிகள் பெண்களுக்கு அதிகாரம் வழங்க யோசிக்கின்றன.
ஏப்ரல் 17ம் தேதி நடந்த நிகழ்வுகள் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. அரசின் இந்த முன்மொழிவு, பல ஆண்டுகளாக மசோதாவைத் தடுத்து நிறுத்தப்பட்டதை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருந்தது. தற்போதைய எந்த எம்பியும் தங்கள் பதவியை இழக்க மாட்டார்கள். பிரதிநிதித்துவம் விரிவடைய மட்டுமே செய்யும். பெண்கள் இறுதியாகப் பெரிய அளவில் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பெறுவார்கள். இருப்பினும், தொகுதி மறுவரையறை தொடர்பான கவலைகள் மற்றும் பிராந்திய சமநிலை என்று எதிர்ப்பு எழுந்தது. வட இந்தியா vs தென்னிந்தியா என விவாதம் திசை திருப்பப்பட்டது. நாடாளுமன்றத்தை ஒன்றிணைத்திருக்க வேண்டிய காரணம், அதைப் பிரித்தது.
அதாவது இந்த மசோதா ஏற்படுத்தும் விளைவுகளை அவர்கள் விரும்பவில்லை.. பெண்கள் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பிடிப்பது, வேரூன்றிய அரசியல் சமன்பாடுகளுக்குச் சவால் விடுத்து, அதிகாரத்தை மறுபகிர்வு செய்கிறது. அங்கேதான் தயக்கம் உள்ளது. அடிமட்ட அளவில், இட ஒதுக்கீடு நீண்ட காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும், பெண்கள் ஏற்கனவே தலைமை தாங்கி வருகின்றனர்.
உள்ளாட்சிகளில் அதிகாரம்
20 மேற்பட்ட மாநிலங்களில், கிட்டத்தட்டப் பாதி பஞ்சாயத்து இடங்கள் பெண்களால் நிரப்பப்பட்டுள்ளன. சுமார் 275 பெண்கள் மாவட்ட பஞ்சாயத்துகளுக்குத் தலைமை தாங்கி, மூத்த அமைச்சர்களுக்கு இணையான பொறுப்புகளையும், நிதி நிர்வாகத்தையும் மேற்கொள்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வட்டாரப் பஞ்சாயத்துகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தலைமை தாங்கி, தங்கள் திறனை நிரூபிக்கின்றனர். இதை அனைத்து கட்சிகளும் எளிதாக ஏற்றுக் கொண்டனர். ஏனெனில் இது அரசியல் அதிகாரத்தின் மைய அச்சுறுத்தலாக இல்லை.
ஆனால், உண்மையான அதிகாரம் இருக்கும் சட்டமன்ற அளவில், எதிர்ப்பு தெளிவாகத் தெரிகிறது. இட ஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பது அரசியல் சமநிலையை மாற்றும் மற்றும் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன. கூடுதல் நிபந்தனைகளும் எழுப்பப்பட்டன.. இதற்கிடையில், கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் ஒரு வேறுபட்ட கதையைச் சொல்கிறது. 2014-க்கு முன்னர், கோடிக்கணக்கான பெண்களுக்கு அடிப்படை கண்ணியம் கூட இல்லை. கழிப்பறைகள் இல்லை, தூய்மையான சமையல் எரிபொருள் இல்லை, வீட்டு பாதுகாப்பு இல்லை, நிதி அணுகல் இல்லை.
மாற்றம்
கடந்த பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளில், இது பெரிய அளவில் மாறிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், சுகாதாரம், உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்புகள், வீடுகள், வங்கிக் கணக்குகள் ஆகியவை நாடு முழுவதும் விரிவடைந்துள்ளன. இது சமூக அதிகாரமயமாக்கலில் இருந்து அரசியல் அதிகாரமயமாக்கலுக்கு, வீட்டில் கண்ணியத்திலிருந்து நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கும் நிலைக்குச் செல்லும் அடுத்த படியாக இருந்தது. ஆனால் அந்த படி மீண்டும் தடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மசோதாவின் தோல்வி மட்டுமல்ல. இது அதிகாரமயமாக்கல் அங்கீகரிக்கப்படும், ஆனால் அதிகாரம் பகிரப்படாத ஒரு அரசியல் வடிவத்தின் தொடர்ச்சி. உங்கள் பாட்டி இதற்காகக் காத்திருந்தார். உங்கள் அம்மா இதற்காக நம்பினார். உங்கள் மகள்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். ஆயினும்கூட, இது கதையின் முடிவல்ல.
அடுத்து என்ன
இந்தியப் பெண்கள் இனி அனுமதிக்குக் காத்திருப்பதில்லை. அவர்கள் ஏற்கனவே நிர்வாகத்திலும், பொருளாதாரத்திலும், சமுதாயம் முழுவதும் வழிநடத்தி வருகின்றனர். இந்த தருணம், நோக்கம் மற்றும் தடைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, அதிகாரத்தைப் பகிரத் தயாராக இருப்பவர்களுக்கும், அதைத் தாமதப்படுத்த உறுதியாக இருப்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உயர்ந்த முடிவெடுக்கும் இடங்களில் பெண்களுக்கு உரிய இடத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, ஒரு தரப்பு ஆதரவு கொடுத்தது.. மற்றொன்று பின்வாங்கத் தேர்ந்தெடுத்தது. இந்தியப் பெண்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள், அவர்கள் இதை நினைவில் வைத்திருப்பார்கள். ஏனென்றால் இது ஒரு முடிவல்ல, இது ஒரு தற்காலிக நிறுத்தம் மட்டுமே. இந்த தருணம் மீண்டும் வரும்போது, அது நாடாளுமன்றத்தில் உள்ள நம்பர்களால் மட்டுமல்ல, இனிமேலும் காத்திருக்க முடியாது என்று சொல்லும் கோடிக்கணக்கான பெண்களின் குரலால் தீர்மானிக்கப்படும்.












Click it and Unblock the Notifications