மூச்சு முட்டும் டெல்லி.. மூடப்படும் பள்ளிகள்.! வெளியே கால் வைத்தாலே நுரையீரலை அழிக்கும் விஷ காற்று!
டெல்லி: தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் மிக மோசமாகப் போய் கொண்டு இருக்கிறது. அங்கு டெல்லி- என்சிஆர் பகுதி நிலைமை மோசமாகிவிட்டதால் அதைக் கட்டுப்படுத்த GRAP திட்டத்தின் 3வது லெவல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு பள்ளிகும் ஹைரிபிட் முறையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்குக் காற்று மாசு அங்கு மிக மோசமாக இருக்கிறது.
வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் காற்று மாசு மிக மோசமான நிலைக்குச் செல்லும். இதற்கு விவசாயப் பொருட்களை எரிப்பது, கட்டுமான தூசி எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு கணிசமாக அதிகரித்திருந்தது.

காற்று மாசு
இதற்கிடையே டெல்லியில் காற்று மாசு மீண்டும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லி- என்சிஆர் பகுதி மக்கள் இன்று காற்றின் தரம் மிக மோசமாக இருக்கிறது. அங்குக் காற்றுத் தரக் குறியீடு அச்சுறுத்தும் வகையில் 413ஆக அதிகரித்துவிட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், டெல்லி அரசு காற்று மாசைக் கட்டுப்படுத்தும் தனது GRAP திட்டத்தின் 3வது லெவலை உடனடியாக அமல்படுத்தியது. இது நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
நேற்று காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரம் 413ஆகப் பதிவானது. டெல்லியில் உள்ள 39 காற்று தர மதிப்பீடு நிலையங்களில் கிட்டத்தட்ட 31 நிலையங்களில் காற்றின் தரம் மிக மோசமாகவே இருந்துள்ளது. வஜிர்பூரில் காலை 7 மணியளவில் மிக மோசமாக காற்றின் தரம் 458ஆக அளவு பதிவாகியுள்ளது. முந்தைய நாள் அதாவது திங்கள்கிழமை காற்றின் தரம் 362ஆக இருந்த நிலையில், நேற்று அது 429ஆக மேலும் மோசமடைந்தது. டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.
பள்ளிகளுக்கு ஹைப்ரிட் முறை
காற்றுத் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால்.. டெல்லி அரசு உடனடியாகத் தனது GRAP லெவல் 3ஐ அமல்படுத்தியது. இதன் காரணமாக டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹைப்ரிட் முறைக்கு மாறியுள்ளன.
இதற்கிடையே காற்று மாசு அடுத்த ஓரிரு நாட்களுக்கு மேலும் மோசமாகும் என மத்திய அரசின் காற்றுத் தர மதிப்பீடு அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு அன்று காற்றின் வேகம் குறைவாக இருக்கும் என்றும் இதனால் காற்றுத் தரக் குறியீடு மோசம் என்பதில் இருந்து மிக மோசம் என்ற நிலைக்குச் செல்லும் என்றும் மத்திய அரசின் காற்றுத் தர மதிப்பீடு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காற்றின் வேகம்
இது தொடர்பாக ஸ்கைமெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மகேஷ் பலாவத் பேசுகையில், "திங்கள்கிழமை முதல் காற்றின் வேகம் குறைந்து, இரவு அமைதியாக இருந்தது. வெப்பநிலையும் குறைந்ததால் காற்று மாசு அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பிறகுதான் காற்றின் வேகம் மணிக்கு 12 கி.மீ. வரை உயர்ந்தது. காற்றின் வேகம் சற்று அதிகரித்தால் மட்டுமே காற்று மாசு குறையும்" என்றார்.
நூரையீரல் காலி
காற்றின் தரம் பல்வேறு வழிகளில் பிரிக்கப்பட்டுள்ளது. AQI 0 முதல் 50ஆக இருந்தால் அது தூய்மையான காற்று என வகைப்படுத்தப்படும். 51 முதல் 100 வரை இருந்தால் சுமாரானது.. 100-200 வரை 'மிதமானது' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நுரையீரல், ஆஸ்துமா அல்லது இதய நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். 201-300 வரை 'மோசமானது' எனச் சொல்லப்படும் நிலையில், அதில் இருந்தால் கிட்டத்தட்ட அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படும்.
301-400 வரை இருப்பது 'மிகவும் மோசமானது'. இது நீண்ட நேரம் வெளிப்படும்போது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. 401-500 'கடுமையானது'. இது ஆரோக்கியமானவர்களையும் பாதிப்பதுடன், ஏற்கெனவே சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications