ஒன்று என்டிஏ கூட்டணிக்கு வாங்க.. இல்லையென்றால் கட்சியை க்ளோஸ் பண்ணுங்க.. விஜய்க்கு டெல்லி செக்?
டெல்லி: டெல்லியில் உள்ள சில பாஜக தலைவர்கள், தமிழக வெற்றிக் கழக (TVK) நிறுவனர் விஜய்க்கு, NDA கூட்டணியில், அதாவது பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட தீவிர அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த பாஜக வியூக வகுப்பாளர்கள் விஜயிடம் அழுத்தம் திருத்தமாக ஒன்று NDA கூட்டணியில் இணையுங்கள் அல்லது அரசியலை விட்டு விலகுங்கள் என்று அழுத்தம் தருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் NDA-வின் நிலையை வலுப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக விஜய்க்கு அழுத்தம் தரப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் அரசியல் பிரவேசம், குறிப்பாக அவரது பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் விஜய் ரசிகர்களிடையே அதிகரித்து வரும் திமுக எதிர்ப்பு உணர்வுகள் காரணமாக, தமிழக அரசியலில் விஜய் பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் என டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் நம்புகின்றனர்.

சிபிஐ வழக்கு - வருமான வரித்துறை வழக்கு
கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. கரூர் விவகாரத்தில் விஜயை நேரடியாக கடுமையாக தாக்காமல் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் திமுக தரப்பையும் ஆளும் கட்சி என்பதால் பாஜக தாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் தனது கால்தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக அண்மையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. கடைசியாக டெல்லியில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் இடப்பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே விஜய்க்கு எதிராக வருமான வரித்துறை வழக்குகள் உள்ளன. விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின... இப்படி ரொக்கமாக வாங்கும் சம்பளத்திற்கு வரி கட்டாமல் விஜய் ஏமாற்றி உள்ளார் என்று வருமான வரித்துறை வாதம் வைத்துள்ளது.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகள் காரணமாக விஜய் மீது டெல்லி வைக்கும் பிரஷர் அதிகம் ஆகி உள்ளது.
விஜய்க்கு அதிகரிக்கும் நெருக்கடி
பாஜகவின் தேசிய தலைவர் இதை பயன்படுத்தி விஜயை கூட்டணிக்கு இழுக்க தீவிரமாக முயன்று வருகிறார்களாம். விஜய் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஒன்று அவர் NDA-வுடன் கைகோர்க்க வேண்டும் அல்லது அரசியலை விட்டு விலக வேண்டும். ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகம் தனியாக நின்றால் எதிர்க்கட்சி வாக்குகளை பிரிக்கும். அப்படி நடக்க கூடாது. ஒன்று அவர் என்டிஏவில் இணைய வேண்டும். இல்லையென்றால் அரசியலில் இருந்தே விலக வேண்டும்.
விஜய் அரசியலை விட்டு விலகினால், ஆளும் திமுக மீது ஏற்கனவே அதிருப்தியில் உள்ள அவரது ரசிகர் பட்டாளம் இயற்கையாகவே NDA முகாமிற்கு நகர்ந்து, பாஜக மற்றும் அதிமுக இருவருக்கும் நன்மை பயக்கும்.
பல விஜய் ரசிகர்கள் திமுகவின் ஆட்சியை விரும்பவில்லை, ஆனால் அவர்களுக்கு ஆதரவளிக்க வலுவான மாற்று இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். விஜய் விலகினால், அந்த ஒட்டுமொத்த வாக்காளர் தளமும் NDA-ன் கீழ் ஒருங்கிணைக்கப்படலாம்," என்று பாஜக தலைமை நம்புகிறது. இதை மனதில் வைத்தே டெல்லியில் உள்ள சில பாஜக தலைவர்கள், தமிழக வெற்றிக் கழக (TVK) நிறுவனர் விஜய்க்கு, NDA கூட்டணியில், அதாவது பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட தீவிர அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications