டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கெஜ்ரிவால்.. நாளை மாலை ஆளுநரை சந்திக்கிறார்!
டெல்லி: மதுபான கொள்கை முறைகேட்டில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். வெளிவந்த கையோடு தான் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில், நாளை மாலை ஆளுநரை கெஜ்ரிவால் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை எழுப்பியதே பாஜகதான். எனவே புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது. இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

விசாரணையை அடுத்து கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது. இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார்.
முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். ஜாமீனை தொடர்ந்து கெஜ்ரிவால் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உயர்நீதிமன்றமும் வழக்கை தன் பங்குக்கு முதலிலிருந்து விசாரித்து, ஒரு வழியாக ஜாமீன் வழங்கியது.
ஆனால், இங்குதான் ட்விஸ்ட். அதாவது அமலாக்கத்துறை போனால் என்ன? அதான் நாங்க இருக்கிறோமே என்று சிபிஐ சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது. அதன் பின்னர் மீண்டும் முதலில் இருந்து ஜாமீன் கோரி ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்கிய கெஜ்ரிவால் இறுதியில் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
வழக்கின் போக்கை பார்த்த நீதிமன்றம், சிபிஐ-ஐ சரமாரியாக சாடி, கெஜ்ரிவாலுக்கு செப்.13ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து வெளியே வந்த கெஜ்ரிவால் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் இரண்டு வெளியானது. ஒன்று, டெல்லி சட்டப்பேரவை தேர்தலை நவம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். இந்த மாதத்தில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது, கெஜ்ரிவாலின் ராஜினாமா. பாஜக தங்களை ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளதாகவும், இதனை மக்களின் ஆதரவோடு கிழித்துவிட்டு தான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்வதாகவும், அதுவரை முதல்வர் பதவியில் தொடரப்போவதில்லை எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதனையடுத்து நாளை மாலை 4.30 மணியளவில் கெஜ்ரிவால் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அவருடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications