சொற்ப இடங்களை ஒதுக்கி அவமதிப்பதா? திமுக மீது காங். மேலிடம் கடும் கோபமாம்- பிப்.14-ல் க்ளைமாக்ஸ்?
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப இடங்களைத்தான் ஒதுக்குவோம் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருப்பதால் டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டில் தாராளம் காட்டியது திமுக.
ஆனால் சட்டசபை தேர்தலில் மிக கறாராக இருந்து வருகிறது திமுக. இதனால் மிக அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 20 அல்லது 25 தொகுதிகள்தான் கிடைக்கும் நிலை உள்ளது. 60 தொகுதிகள், 40 தொகுதிகள் என ஆரம்பித்த காங்கிரஸ் பேச்சுவார்த்தை ஒருகட்டத்தில் திமுக 20க்கும் மேல் தாண்டாது என உறுதி செய்து கொண்டது.

ராகுல் பிரசாரம்
இந்த அதிருப்தியை அரசல் புரசலாக காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படுத்தி வந்தனர். இருந்தபோதும் பொதுவெளியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதாக தமிழக தலைவர்களும், அண்மையில் தமிழகம் வந்த ராகுல் காந்தி போன்றவர்களும் தெரிவித்தனர். ராகுல் காந்தியின் வருகையின் ஒரு பகுதியே திமுகவுடனான தொகுதி பேரத்தை அதிகரிக்கும் யுக்தி என்றும் சொல்லப்பட்டது.

திட்டவட்ட திமுக
இத்தனைக்கும் பிறகு திமுக தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இதனை முறைப்படி டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கவும் திமுக தரப்பு முயற்சித்திருக்கிறது. இதனை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நடத்தி வரும் நபரே டெல்லி காங். மேலிடத்தில் சொல்லவும் முயற்சித்தார் என்பது ஒரு தகவல். ஆனால் இதற்கு காங். மேலிடம் சிக்னல் தரவில்லையாம்.

கூட்டணி கட்சிகள் குமுறல்
ஏற்கனவே திமுக அணியில் தொகுதி பங்கீட்டில் அத்தனை கூட்டணி கட்சிகளும் அதிருப்தியில் குமுறிக் கொண்டிருக்கின்றன. இதனால் சசிகலாவின் அமமுக தலைமையில் ஒரு அணி அமையுமோ என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் திமுக தரப்பு அணுகுமுறையை டெல்லி நிராகரித்திருக்கிறது.

ராகுல் மீண்டும் பிரசாரம்
இந்நிலையில் வரும் 14-ந் தேதி ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை தருகிறார். அன்றைய தினம்தான் பிரதமர் மோடியும் வருகிறார். ராகுல் காந்தியின் இந்த 2-வது பயணத்தின் போதாவது திமுக தலைவர்களுடன் இணைந்து பிரசாரம் செய்து கூட்டணியை உறுதி செய்வாரா? அல்லது கூட்டணியின் பாதை எது என்பதை கோடிட்டு காட்டி செல்வாரா? என்பது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications