மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: "இந்தியா" கூட்டணியை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம்!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் "இந்தியா" கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ல் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்டவை ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்தது. ஆனாலும் தற்போது சுமூகமாக தொகுதிப் பங்கீடு முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் மர்றும் மகாரஷ்டிராவில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். டெல்லி, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகி நின்ற நிலையில் தற்போது இரு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறத்உ ஆம் ஆத்மி.
அண்மையில் நடைபெற்ற ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் இந்த கூட்டணி அமையவில்லை. ஹரியானாவில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்த போது, ஆம் ஆத்மி- சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் போனதும் ஒரு காரணம் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications