அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல கடந்த 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஏற்கெனவே டெல்லியின் மூன்று அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதால் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருந்து. டெல்லியைச் சேர்ந்த சுர்ஜித் சிங் யாதவ் என்ற சமூக ஆர்வலர் இந்த வழக்கை தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், "முதலமைச்சர் பதவி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. நிர்வாக பிரச்னை ஏற்பட்டால் குடியரசுத் தலைவர், ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி உத்தரவிட முடியாது" என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications