35 நாட்கள் பாலியல் உறவுக்கு கணவனுக்கு நோ சொன்ன மனைவி.. விவாகரத்து கொடுத்த டெல்லி ஐகோர்ட்! என்னாச்சு
டெல்லி: வேண்டுமென்றே மனைவி பாலியல் உறவை மறுப்பது கொடுமையானது என்று டெல்லி ஐகோர்ட் விவாகரத்து வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து கீழமை நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட் மேலும் சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்துள்ளது.
திருமணமாகி சில வாரங்கள் ஆன பிறகு மனைவியிடம் இருந்து கணவன் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். மனைவி வேண்டுமென்றே பாலியல் உறவை மறுப்பதாகக் கூறி கணவன் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் டெல்லி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்தை வழங்கியது.

டெல்லி குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனைவியின் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான அமர்வு நிராகரித்தது.
டெல்லி ஐகோர்ட்: பாலுறவு இல்லாத திருமணம் வெறுக்கத்தக்கது என்றும் திருமணத்தில் பாலியல் உறவில் ஏற்படும் ஏமாற்றத்தைத் தாண்டி வேறு எதுவும் மோசமானது இல்லை என்றும் டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது. மேலும், "வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாக மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருப்பினும், இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. மனைவியின் இந்த நடவடிக்கையே கூட கொடுமைப்படுத்தும் ஒன்றாகக் கருதலாம்.
மனைவி வேண்டுமென்றே பாலியல் உறவை மறுப்பது கொடுமைக்குச் சமம் என்று டெல்லி ஐகோர்ட் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்து இருந்தது. அதுவும் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்றால் இதை அடிப்படையாக வைத்தே விவாகரத்து வழங்கலாம். இந்த வழக்கில் இரு தரப்பிற்கும் இடையிலான திருமணம் வெறும் 35 நாட்களுக்கு நீடித்தது. இதில் பாலுறவுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதே திருமணம் தோல்வியில் முடியக் காரணமாக இருந்துள்ளது" என்று நீதிமன்றம் தெரிவித்தது.
பின்னணி என்ன: 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த வழக்கில் ஏற்பட்ட மனக் கொடுமையைக் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கடந்த 2004இல் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இருப்பினும், திருமணம் நடந்து 35 நாட்களில் மனைவி பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நிலையில். அதன் பிறகு திரும்பவே இல்லை.
அதன் பின்னரே கணவன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் தொடர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்த நிலையில், அங்கே விவாகரத்து வழங்கப்பட்டது. அதை எதிர்த்தே மனைவி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்த டெல்லி ஐகோர்ட் குடும்ப நல நீதிமன்றம் சரியான முடிவையே எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.
சரியான தீர்ப்பு: மேலும் டெல்லி ஐகோர்ட் தனது தீர்ப்பில், "வரதட்சணை கேட்டதாக மனைவி அளித்த புகார் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துள்ளது. இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதுவே கணவனைக் கொடுமைப்படுத்தும் நடவடிக்கை தான்.
ஏற்கனவே வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மன ரீதியாகத் துணையைக் கொடுமைப்படுத்துவது குறித்த காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் எந்தவொரு காரணமும் இல்லாமல் பாலுறவுக்கு மறுப்பதும் கொடுமைப்படுத்துவதாகவே கூறப்பட்டுள்ளது. எனவே, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து.. டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறோம்" என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications