"அந்நியன்" பட பாணியில்.. சைக்கோ கொலைகாரன் அப்தாப்புக்கு "நார்கோ" சோதனை
டெல்லி: இந்தியாவையே அலறவிட்டுள்ள டெல்லி சைக்கோ கொலைக்காரன் அப்தாப் அமீனுக்கு 'நார்க்கோ' சோதனை செய்ய டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
"அந்நியன்" திரைப்படத்தில் நடிகர் விக்ரமை நாசர் ஒரு சோதனைக்கு உட்படுத்துவார்.. நினைவிருக்கிறதா.. கிட்டத்தட்ட அதுபோன்றது 'நார்க்கோ' சோதனை. சொக்க வைக்கும் மருந்து கொடுத்து உண்மையை வெளியே கொண்டுவருவார்கள்.
உண்மைக் கண்டறியும் சோதனையில் அப்தாப்பின் உடல்நிலை சரியாக ஒத்துழைக்காததால் இந்த சோதனைக்கு அவனை உட்படுத்த டெல்லி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உலகமே திரும்பிப் பார்த்த கொலை
டெல்லியில் தன்னுடன் லிவிங் டுகெதர் (Living Together) உறவில் இருந்த தனது காதலி சாரதாவை அப்தாப் அமீன் கொலை செய்த சம்பவம் இந்தியாவையும் தாண்டி உலக ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால், சாதாரண கொலை போல அல்லாமல் சாரதாவை 35 துண்டுகளாக வெட்டியும், அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தும் அப்தாப் செய்த செயல்கள் அனைத்தும் ஒரு பயங்கர த்ரில்லர் சைக்கோ படங்களை நினைவூட்டுவதாக இருந்தது. உண்மையிலேயே, ஒரு சைக்கோ சீரியலை பார்த்து ஈர்க்கப்பட்டே இந்த கொலையை செய்ததாக அப்தாப் அமீனே வாக்குமூலம் அளித்துள்ளான்.

சைக்கோ கில்லர் என சந்தேகம்
கடந்த மே மாதம் நடந்த இந்தக் கொலை இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, அப்தாப்பை கைது செய்த போலீஸார் அவரிடம் மூன்று வாரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அவரது முக பாவனைகள் மனநல நிபுணர்களை வைத்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அப்போது, இந்த சாரதா கொலையை தவிர வேறு ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை அப்தாப் மறைப்பதாக மனநல நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால் அப்தாப் ஒரு சீரியல் சைக்கோ கில்லராக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கும் வந்தது. மேலும், அவரது சில நடவடிக்கைகளும் சைக்கோ கில்லர்களை ஒத்திருந்தது.

திருப்தியளிக்காத உண்மைக் கண்டறியும் சோதனை..
இதன் தொடர்ச்சியாக, அப்தாப் அமீனுக்கு உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அனைத்து நடவடிக்கைகளுக்கும் போலீஸார் ஏற்பாடு செய்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அப்தாப்புக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் உண்மைக் கண்டறியும் சோதனை நிறுத்தப்பட்டது. எனினும், சற்று காய்ச்சல் குறைந்ததை அடுத்து அவருக்கு கடந்த 2 தினங்களாக இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும், இந்த சோதனையின் போது அப்தாப் முழுமையாக உண்மையை கூறவில்லை என போலீஸார் கண்டுபிடித்தனர்.

அந்நியன் பாணியில்..
இந்நிலையில்தான், அப்தாப்பை 'நார்க்கோ அனாலிசிஸ்' (Narco Analysis) என்ற சோதனைக்கு உட்படுத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். சோடியம் பென்ட்டோதால், ஸ்கோபோலமைன், சோடியம் அமிட்டால் ஆகிய வேதிப்பொருட்களை நரம்பில் செலுத்தி இந்த சோதனை செய்யப்படும். இந்த சோதனையின் போது சம்பந்தப்பட்ட நபர் சுயநினைவை இழப்பார்கள். ஆனால், அவர் வாழ்க்கையில் சிறு வயது முதல் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மூளை நியாபகப்படுத்தும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், அந்நியன் திரைப்படத்தில் நடிகர் விக்ரமை நாசர் ஒரு ஆய்வகத்தில் வைத்து, "உங்களுக்கு இப்போ 10 வயது ஆகுது.. நீங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க.." என கேட்பார் அல்லவா. அதே சோதனைதான் இது. உண்மைக் கண்டறியும் சோதனையை விட மிக துல்லியமான இந்த சோதனையின் முடிவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும் என டெல்லி போஸீல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications