மீண்டும் டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்.. தடைகளை உடைத்து போராடுவது எந்த கோரிக்கைகளுக்காக?
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக உக்கிரமான போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் 2.0 என அழைக்கப்படும் மீண்டும் டெல்லி சலோ போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு போலீஸ் மற்றும் துணை ராணுவத்தை களமிறக்கியுள்ளதால் டெல்லி எல்லைகள் யுத்த களமாக காட்சி தருகிறது.
மத்திய பாஜக அரசால், விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் சட்டம்-2020, விவசாயிகள் விலை ஒப்பந்த உத்தரவாதம், விவசாய சேவைகள் சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவை 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன.

இந்த சட்டங்கள் அனைத்துமே விவசாயிகள் நலனுக்கு எதிரானது; விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடிமைகளாக்குவது என்பதால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 2020-ம் ஆண்டு பிற்பகுதியில் டெல்லி எல்லைகளில் கூடாரங்கள் அமைத்து கடும் குளிர், பனி காலத்தில் தொடங்கிய போராட்டம் உயிரைக் கொல்லும் கடும் வெயிலிலும் தொடர்ந்து ஓராண்டுகள் நீடித்தது.
இந்தப் போராட்டங்களில் மொத்தம் 800 விவசாயிகள் உயிர் நீத்தனர். விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி 8 பேரை படுகொலை செய்தார்.
இருந்த போதும் விவசாயிகளின் தீரமிக்க போராட்டம் ஓயவில்லை. இதனையடுத்தே பிரதமர் மோடி, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்து விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த விவசாயிகளின் டெல்லி போராட்டம் முடிவுக்கு வந்தது.
மத்திய பாஜக அரசும் அறிவித்த படி நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. ஆனால் தற்போது மீண்டும் விவசாயிகள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். 2020-21 போராட்டத்தை மீண்டும் முன்ன்டுக்கவே டெல்லி நோக்கி விவசாயிகள் அலை அலையாக திரண்டு வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு போராட்டம் மீண்டும் நடந்துவிடவே கூடாது என்பதில் மத்திய அரசு மும்முரமாக இருக்கிறது.
விவசாயிகளின் தற்போதைய போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான 5 கோரிக்கைகள்:
எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்
நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
2021 போராட்டத்தின் போது லக்கிம்பூரில் 8 விவசாயிகளை படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ10,000 ஓய்வூதியம் தர வேண்டும்; 2020-21 போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை முன் வைத்துதான் டெல்லியை நோக்கி 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களில் 70,000 விவசாயிகள் திரண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா வழியாக டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கில் திரண்டு வரும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இதனால் டெல்லி எல்லைகள் பாகிஸ்தான் எல்லை போல காட்சி தருகின்றன.












Click it and Unblock the Notifications