இந்தியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா: ”மோடி தனது நண்பர் டிரம்பிடம் பேசனும்” பஞ்சாப் அமைச்சர் டிமாண்ட்
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படும் பணி தொடங்கியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி, தனது நண்பரான டொனால்டு டிரம்பிடம் இவ்விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று பஞ்சாப் அமைச்சர் குல்தீப் சிங் கூறியுள்ளார். டிரம்பிற்காக மோடி 2019-ல் பிரசாரம் செய்ததையும் அவர் சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தவற்றை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். தற்போது அதிகாரத்திற்கு வந்து இருக்க கூடிய சூழலில் அவற்றுக்கான நடவடிக்கையில் டிரம்ப் இறங்கியிருக்கிறார்.

அந்த வகையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தும் பணி தொடங்கியுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள், தங்களின் விசா காலம் முடிந்த பிறகு நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பவர்கள் என சுமார் 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து 104 இந்தியர்களுடன் 'சி-17' ரக ராணுவ விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
அவர்கள் அனைவரும் நேற்று மதியம் 2 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். பஞ்சாபில் இந்தியர்கள் வந்திறங்கிய நிலையில், அம்மாநில என்.ஆர்.ஐ விவகார துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், "பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பஞ்சாப் அமைச்சர் தலிவால் கூறுகையில், "பிரதமர் மோடி, டிரம்பை தனது நண்பர் என்று சொல்லிக்கொள்கிறார்.
டிரம்பிற்காக கடந்த 2019- ஆம் ஆண்டு பிரசாரம் கூட செய்தார். இந்த விவகாரம் சர்வதேச பிரச்சினை என்பதால் அவர்கள் இருவரும் பேசி, அந்த மட்டத்தில் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம்" என்றார். அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அமிர்தசரஸ் வந்தடைந்த அமெரிக்க ராணுவ விமானத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 104 வருகை தந்தனர்.
இதில், ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேர் விமானத்தில் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், அமெரிக்க ராணுவ விமானத்தில் வந்த இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறபப்டும் நிலையில், வரும் வாரங்களில் இவர்கள் ஒவ்வொரு பேட்சாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதேபோன்று அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், அமெரிக்கா ராணுவ விமானமான சி 19-இல் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு அழைத்து வந்ததாகவும், பஞ்சாப் வந்த பிறகு தான் அவிழ்த்து விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்று நாடாளுமன்றத்திலும் இந்த விவாகரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications