இந்த மாதமேவா.. இந்தியா- சீனா எடுத்த சூப்பர் முடிவு.. உலக நாடுகளை திகைக்க வைத்த விமான சேவை அறிவிப்பு
டெல்லி: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நேரடி விமான சேவைகள், இரு நாடுகளும் செய்து கொண்ட திருத்தப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தின் படி, இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவையை எப்படி அளிப்பது, எந்த கால அட்டவணையில் அளிப்பது, எந்தெந்த நகரங்களில் இருந்து அளிப்பது என்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், விமான சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் விரைவில் விமான சேவை அட்டவணையை வெளியிட போகின்றன.
இந்தியா சீனா இடையே விமான சேவையை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக வேகம் எடுத்தன. எப்போது டிரம்ப் இந்தியாவிற்கு வரி விதிக்க தொடங்கினாரோ, அப்போது முதலே இந்தியா உடன் சீனா நெருக்கம் காட்ட தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சீனா இந்தியா உடன் சுமூக உறவை வளர்க்க கடந்த சில மாதங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியது. அதனால் தற்போது பழைய படி சீனாவிற்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கூறும் போது, " இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் மத்திய அரசின் அணுகுமுறையின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது மற்றும் திருத்தப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தம் குறித்து தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது.
விமான சேவை இந்த மாதமே தொடக்கம்
இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இரு நாடுகளின் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இருந்து இரு நாடுகளையும் இணைக்கும் நேரடி விமான சேவைகள் இம்மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்கலாம் என்று இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது குளிர்காலப் பருவ அட்டவணைக்கு ஏற்ப இந்த சேவைகள் தொடங்கப்பட உள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் சீனா இடையேயான மக்களுக்கிடையேயான தொடர்பை மேலும் எளிதாக்கியுள்ளது. இது இருதரப்புப் பரிமாற்றங்களை படிப்படியாக இயல்பாக்குவதற்கு பெரும் பங்களித்துள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவை சார்ந்து இல்லை
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், இந்தியாவின் மீது (குறிப்பாக ரஷ்ய எண்ணெயை வாங்குவது தொடர்பாக) அதிக வரி விதித்ததன் மூலம் இரு நாடுகளின் வர்த்தக உறவில் சிக்கல் உருவாகி உள்ளது. இந்தச் சூழலில் தான் இந்தியா சீனாவுடன் உறவுகள் மேம்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்திருக்க மாட்டோம் என்று இந்தியா காட்டுவதாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.
டிரம்ப் கவலை
முன்னதாக அதிபர் டிரம்ப் அமெரிக்கா இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் 'இழந்து விட்டதாக' வெளிப்படையாகவே அண்மையில் தெரிவித்தார். இந்தியா, சீனாவுடன் மீண்டும் இணக்கத்தை நோக்கிச் செல்வது குவாட் (அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) கூட்டணியின் நோக்கத்தை வலுவிழக்கச் செய்யும் என அமெரிக்கா அச்சத்தில் இருக்கிறது.
இந்தியாவின் நிலைப்பாடு
ஆனால் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை யாரின் அழுத்தத்திற்கும் உட்படாமல் சுயமாக முடிவெடுத்து வருகிறது. சீனாவுடனான இணக்கம், அமெரிக்காவின் விருப்பங்களுக்கு இணங்காமல் இந்தியா தனது சொந்த நாட்டு மக்களின் நலனை மனதில் கொண்டே செய்கிறது.
சீனாவின் நிலைப்பாடு
அதேநேரம் சீனாவை பொறுத்தவரை இந்தியா-அமெரிக்கா உறவில் சிக்கல் எழும்போதெல்லாம், சீனா அந்த இடைவெளியைப் பயன்படுத்தி இந்தியாவுடன் பொருளாதார மற்றும் மக்கள் தொடர்பை வலுப்படுத்த முயற்சிப்பதாக விமர்சனங்கள் உள்ளது. விமான சேவையின் மூலம் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் சீனாவின் முயற்சி, அமெரிக்காவிற்கு எதிரான ஒரு அரசியல் சமிக்ஞையாகவே ஐரோப்பிய நாடுகளால் பார்க்கப்படும் என்கிறார்கள். தற்போதைய நிலையில், விமான சேவை, விசாக்கள் மற்றும் வர்த்தகப் பாதைகளை மீண்டும் திறப்பது ஆகியவற்றில் சீனா மிகவும் ஆர்வமாக உள்ளது. இது அமெரிக்காவிற்கு கவலையை அதிகரித்திருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications