மணிப்பூர் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலம்- நாடாளுமன்றத்தை 2-வது நாளாக முடக்கிய எதிர்க்கட்சிகள்!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூரம் குறித்து சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும்; பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் 2-வது நாளாக இன்றும் முடங்கின.
மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக குக்கி, மைத்தேயி இனக்குழுவினரிடையே வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறைகளில் 200 பேர் வரை பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகி உள்ளனர். மணிப்பூரில் 2 மாதங்களாக இணையசேவை முடக்கத்தில் இருப்பதால் பல கொடூரங்கள், வன்முறையின் உச்சகட்டம் வெளியே வராமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி இனத்தின் 2 பெண்கள் வன்முறை கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் வீடியோ நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் இந்த வீடியோ காட்சிகளால் அதிர்ந்து போயுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய போது இந்த மணிப்பூர் கொடுமை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். மணிப்பூர் அட்டூழியம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் எனவும் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்ப உள்ளன. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் குழு தலைவர் டிஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதேபோல பல கட்சிகளின் எம்பிக்களும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர்.
லோக்சபா : இந்த சூழ்நிலையில் முற்பகல் 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடங்கின. லோக்சபாவில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். லோக்சபா சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் குறித்து விவாதிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் இதனை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்கவில்லை. இதனால் லோக்சபாவில் பெரும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு இடையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மணிப்பூர் விவகாரம் குறித்து உறுதி அளித்தார். ஆனால் இதனை ஏற்காமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு கொண்டிருந்தனர். இதனால் லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பகல் 12 மணிக்கு லோக்சபா மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி தொடர்ந்தது. கைகளில் பதாகைகளுடன் எம்பிக்கள் சிலர் சபாநாயகர் இருக்கை முன்பாகவும் முழக்கமிட்டனர். சிறிது நேரம் அமளிக்கு இடையே சபை அலுவல்கள் நடைபெற்றன. பின்னர் லோக்சபா நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபா: ராஜ்யசபாவில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அத்துடன் சபை நடவடிக்கைகள் குறித்து ராஜ்யசபா தலைவர் விவரித்து முழக்கமிட்ட எம்.பி.க்களை அமைதிப்படுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆவேசம் ஓயவில்லை. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் எழுந்து, பிரதமர் மற்றும் மணிப்பூர் குறித்து பேசக்கூடாதா? சபை குறிப்புகளில் இருந்து ஏன் நீக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்காத ராஜ்யசபா தலைவர் சபை நடவடிக்கைகளை பகல் 2.30 மணி வரை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications