பயம், பதற்றம் வேண்டாம்! தேர்வை திருவிழாவாக கொண்டாடி எழுதுங்கள்! மாணவர்களுக்கு பிரதமர் மோடி ‛அட்வைஸ்’
டெல்லி: ‛‛பயம், பதற்றம் வேண்டாம். தேர்வை திருவிழாவாக கொண்டாடி எழுதுங்கள். ஏனென்றால் தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்'' என பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ‛அட்வைஸ்' வழங்கினார்.
பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி தைரியமாக எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் டெல்லி டால்கடோரா ஸ்டேடியத்தில் ‛பரிக்சா பே சர்ச்சா' என்ற பெயரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

திருவிழா மனநிலையில் தேர்வு
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை (மாணவர்கள்) சந்திப்பதால் இது எனக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தேர்வெழுதும் மாணவர்கள் பயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களை போல் செயல்பட வேண்டும் என நினைக்காதீர்கள். நீங்கள் எதை செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை பின்பற்றி பொதுத்தேர்வை திருவிழா மனநிலையில் எழுத வேண்டும். தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். ஏற்கனவே நீங்கள் பல தேர்வுகளை சந்தித்து இருப்பதால் பயம், பதற்றம் வேண்டாம்.

சுயபரிசோதனை
ஆப்லைனில் என்ன நடக்கிறதோ, அதுவே ஆன்லைன் தேர்விலும் நடக்கும். இதனால் எந்த வகை தேர்வு என்பதில் பிரச்சனை அல்ல. எதுவாக இருந்தாலும் நம் மனது அந்த விஷயத்தை ஆழமாக ஆராய்ந்து புரிந்து கொண்டால் போதும். இது தேர்வில் எந்த பயத்தையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தாது. ஆன்லைன் முறையில் படிக்கும்போது மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் கல்வியானது அறிவை அடைவதற்கான கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. ஆப்லைன் கல்வி என்பது அந்த அறிவை நிலைநிறத்தி, நடைமுறைப்படுத்துவதை பற்றியதாகும்.

தேசிய கல்வி கொள்கை
தேசிய கல்வி கொள்கை வரைவு தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக நாங்கள் பலரிடம் ஆலோசனைகள், விவாதங்கள் செய்துள்ளோம். அறிவுஜீவிகள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுள்ளோம். உலகம் முழுவதும் திறமை என்பதே முக்கியமானது. தொழில்நுட்பம் என்பது சாபக்கேடு அல்ல. அதனை ஒவ்வொருவரும் திறம்பட பயன்படுத்த வேண்டும்.

தொழில்நுட்ப பயன்பாடு
இன்று மாணவர்கள் 3டி பிரிண்டர்கள், Vedic கணிதத்துக்கான செயலிகளை உருவாக்கி வருகின்றனர்.அவர்கள் திறம்பட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். நல்ல மதிப்பெண் பெற பெற்றோர், ஆசிரியர்கள் அழுத்தம் கொடுப்பதாக உணர கூடாது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. எதிர்காலத்தை சுதந்திரமாக தீர்மானிக்க குழந்தைகளை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் சிலவேளையில் பெற்றோர்கள் குழந்தைகளின் திறமையை உன்னிப்பாக கவனிக்க தவறிவிடுகிறார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும் பலமுறை கண்டுப்பிடிக்க தவறிய திறமைகள் ஒவ்வொரு குழந்தைகளிடம் உள்ளது. இதை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.

பலவீனங்களை ஆராய்ந்து வெற்றி
இன்றைய சூழலில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பலவீனங்களை பலமாக மாற்றி சாதித்து காட்டுகின்றனர். இதனால் மாணவர்கள் சுயபரிசோதனை செய்து தங்களது முன்னேற்றத்துக்கான பலவீனங்கள் ஆராய்ந்து வெற்றி பெற வேண்டும். மாணவர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சிரமங்களை சந்திக்க நேரிடும். இதனால் வகுப்பில் கற்று கொண்டதை நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்யும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி தியானம் செய்வது அன்றாட வாழ்க்கைக்கு தேவை. இது நாம் செய்யும் பணியில் கவனம் செலுத்த உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications