பெயருக்கு பதில் ஜாதி, மதமா? நிர்மலா சீதாராமன்-காங் எம்பியால் வெடித்த சர்ச்சை.. கொந்தளித்த சபாநாயகர்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா காங்கிரஸ் எம்பி ஏஆர் ரெட்டி இடையே விவாதம் அனல் பறந்தது. இந்த வேளையில் ஜாதியை மனதில் வைத்து நிர்மலா சீதாராமன் பேசியதாக காங்கிரஸ் எம்பி ஏஆர் ரெட்டி கூறியதை தொடர்ந்து, ‛‛நாடாளுமன்ற சபையில் பெயருக்கு பதில் ஜாதி, மதத்தை குறிப்பிட்டு பேசக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 7 ம் தேதி துவங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 29 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளது. கூட்டத்தில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டம்
அதேவேளையில் இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் இந்தியா-சீனா இடையே அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் நடந்த மோதல் பற்றியும் இன்று புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நாடாளுமன்ற கூட்டம் துவங்கியது.

காங்கிரஸ் எம்பி பேச்சு
இந்த கூட்டத்தில் கேள்வி நேரத்தில் தெலங்கானா காங்கிரஸ் எம்பி ஏஆர் ரெட்டி பேசினார். அப்போது, ‛‛டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியூவில் இருப்பதாக விமர்சித்தார்'' என்றார்.

நிர்மலா சீதாராமன் பதில்
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது, ‛‛இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும்போல் மிகவும் வலுவாக இருக்கிறது. பிற நாடுகளின் நாணயத்தை விடவும் வலுவாக இருக்கிறது. டாலர் ரூபாய் மதிப்பு ஊசலாட்டத்தை தவிர்க்க ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி இருப்பை பயன்படுத்தி தீர்வு காண முற்பட்டுள்ளது. சிலருக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு பொறாமை'' என்றார்.

ஜாதி விவகாரம்
இந்த வேளையில், ‛‛காங்கிரஸ் எம்பி. அரைகுறை இந்தியில் பேசியதால், அதே போல் அரைகுறை இந்தியில்தான் பதிலளிப்பேன்,''என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார். இது காங்கிரஸ் எம்பி ஏஆர் ரெட்டியை கோபப்படுத்தியது. குறைந்த ஜாதி எனக்கூறப்படும் சமூகத்தில் இருந்து நான் வந்ததால் தான் அமைச்சர் தன்னை விமர்சிப்பதாக ஏஆர் ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். இது மீண்டும் விவாதத்தை கிளப்பியது.

ஓம்பிர்லா எச்சரிக்கை
இதையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‛‛தொகுதியில் வசிக்கும் மக்கள் எம்பிக்களை ஜாதி, மதம் பார்த்து தேர்வு செய்வது இல்லை. அவையில் எந்தவொரு எம்பியின் ஜாதி, மதத்தையும் குறிப்பிட்டு உறுப்பினர்கள் பேசக்கூடாது. மீறினால் எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கடிந்து கொண்ட சபாநாயகர்
முன்னதாக ஏஆர் ரெட்டி பேசியபோது, சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு பேச முயன்றார். அப்போது ஏஆர் ரெட்டி, முன்வந்த போது ‛‛நான்தான் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறேன். குறுக்கிடாதீங்க'' என்றார். இந்நிலையில் தான் மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியிடம், ‛‛நீங்கள் காங்கிரஸ் கட்சியின் அவை தலைவர். உங்கள் கட்சியின் எம்பிக்கள் சபாநாயகரிடம் பேசும்போது ''குறுக்கிடாதீர்கள்'' என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்பதை புரிய வைக்க வேண்டும்'' என்று கடிந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications