டிரம்பிடம் சரணடைந்த மோடி.. கூச்சமாக இருக்குதாம்.. வரி குறைப்புக்கு நடுவே காங்கிரஸ் ‛அட்டாக்’
டெல்லி: நம் நாட்டுக்கு விதிக்கப்பட்ட வர்த்தக வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு, டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் தான், மோடி மீது டொனால்ட் டிரம்ப் அழுத்தம் காட்டுகிறார். இதனால் டிரம்பிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி 25 சதவீதமும், அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று பிரதமர் மோடியுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வழியாக பேசினார்.

அப்போது இருநாடுகளின் வர்த்தக ஒப்பந்தம், வரி விவகாரங்கள் பற்றி இருவரும் ஆலோசித்தனர். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் ‛‛பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் மரியாதையின் காரணமாக அவரது கோரிக்கையை அமெரிக்கா ஏற்றது., அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு உடனடியாக ஒப்புக்கொண்டோம். இதன் மூலம் அமெரிக்கா தற்போதுள்ள 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைக்கும்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த அவர் (பிரதமர் மோடி) ஒப்புக்கொண்டார். அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் கொள்முதல் செய்ய உள்ளார். அதேபோல் இந்தியாவும், அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்க முன்வரும். அதுமட்டுமின்றி எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்பட பல துறைகளில் பிரதமர் மோடி, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருட்களை அமெரிக்காவில் இருந்து வாங்குவதாக உறுதியளித்துள்ளார்'' என்று கூறியிருந்தார்.
இது நம் நாட்டுக்கு பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுபற்றிய முழுவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. நம் நாடு ரஷ்யாவை கைவிட்டு அமெரிக்கா, வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்க உள்ளதா? என்பது பற்றி இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரியோ, இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த உள்ளது. இதனால் அதற்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியும் ரத்து செய்யப்படும். இதனால் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் என்று தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை, காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் பொதுச்செயலாளராக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛அவர்(அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்) வாஷிங்டன் டி.சி-யிலிருந்து 'ஆபரேஷன் சிந்துர்' நிறுத்தப்படுவதாக அறிவித்தார். வாஷிங்டனில் இருந்து கொண்டே ரஷ்யா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அறிவித்தார்.
இப்போது வாஷிங்டனில் இருந்தே இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். அதுபற்றிய முழு விவரங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி மீது சில அழுத்தம் காட்டுவதை இது தெளிவாக புரிய வைக்கிறது. வழக்கம் போல் ஆரத்தழுவுவது ஒருபுறம் இருக்கட்டும் அவருடன் சேர்ந்து இருக்கவே மோடி இப்போது கூச்சப்படுகிறார். அதோடு மோடி, அவரிடம் சரணடைந்துவிட்டார். நிச்சயமாக இதுவே அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தலையாய ஒப்பந்தமாக இருக்க முடியாது. மொத்தத்தில் வாஷிங்டன் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
அதாவது டொனால்ட் டிரம்ப் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தியதாகவும், நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாகவும், இப்போது வரியை 18 சதவீதமாக குறைத்ததாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இப்படியாக தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் கை ஓங்கியிருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications