விளையாடாதீங்க! அக்னிபாத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு! மத்திய அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்!
டெல்லி: இந்தியாவில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 4 ஆண்டு பணியாற்றும் திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பீகாரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முப்படைகளில் சேர வேண்டும் என பயிற்சி செய்து வரும் இளைஞர்கள் இன்று ரயில் மறியல், சாலை மறியல் செய்த நிலையில் எங்கள் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவில் பாதுகாப்பு படைக்கான ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலம் சேவையாற்ற முடியும்.
இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.
சவால்களை சமாளிக்க முழு போர்படையாக மாறும் இந்திய ராணுவம்! அக்னிபாத் குறித்து ராணுவ தளபதி பெருமை

அக்னிபாத் திட்டம் அறிமுகம்
அதன்படி அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் பணிக்கு சேரலாம். இவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர். தக்க வைக்கப்படும் வீரர்கள் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். முதல் ஆண்டு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பளத்தில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். 4 ஆண்டுக்கு பிறகு ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

கலவையான கருத்துகள்
இந்த திட்டத்துக்கு கலவையான கருத்துகள் எழுந்துள்ளன. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் முப்படைகள் எப்போதும் இளமையாகவே இருக்கும். அதோடு இந்தியாவில் ஏராளமானவர்கள் பாதுகாப்பு துறை தொடர்பான பயிற்சிகளை பெற முடியும் என பாசிட்டிவ்வான கருத்துகள் எழுந்துள்ளன. அதேநேரத்தில் ஒப்பந்த பணி போன்று இத்திட்டம் உள்ளதால் ஏராளமானவர்களால் நாட்டுக்கு நீண்டகாலம் சேவையாற்ற முடியாமல் போகலாம் என்ற கருத்தும் வெளியாகி உள்ளது. மேலும் நாட்டின் நிதி செலவை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பீகாரில் ரயில் மறியல்
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஏராளமானவர்கள் பீகாரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது ராணுவம், விமானப்படை, கப்பற்படையி் இணையும் நோக்கில் பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். பீகார் புசார் நகரில் உள்ள ரயில் நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயிலை இயக்கத்தை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ரயில்வே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து வெளியே அனுப்பினர்.

சாலை மறியல்
இதேபோல் முசாபர்நகரில் உள்ள உத்தர பரிதேசம் லக்னோ பீகாரின் பரனி பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் ஏராளமானவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தின்போது ராணுவம், கடற்படை, விமானப்படையில் வழக்கமான ஆட்சேர்ப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். அக்னிபாத் திட்டம் என்பது குறுகிய கால பணியாக உள்ளது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

மத்திய அரசு விளையாட வேண்டாம்
மேலும் கொரோனா காலத்தால் கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை நடைபெறவில்லை. இதனால் வரும் ஆட்சேர்ப்பின்போது 2 வயது வரை அனைவருக்கும் தளர்வு கொடுக்க வேண்டும். அதோடு குறுகிய கால பணிக்கான அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை மாற்ற வேண்டும். பாதுகாப்பு படையில் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் என துடிக்கும் இளைஞர்களின் வாழ்வில் மத்திய அரசு விளையாட வேண்டாம் எனக்கூறினர். மேலும், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும் சிலர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.