Bihar SIR: "பீகாரில் நீக்கப்பட்ட.. 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது.." தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
டெல்லி: பீகாரில் சார் நடவடிக்கையில் (Bihar SIR) சுமார் 65 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்களைப் பகிர முடியாது என்றும் அந்த விவரங்களைக் கேட்க சட்டத்தில் இடமில்லை என்றும் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஆணையம் இப்போது சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிராகப் பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

பீகார் சார் நடவடிக்கை
அதன்படி ஏடிஆர் என்ற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பும் வழக்கு தொடர்ந்தது. அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் கோரப்பட்டது. அதாவது அவர்கள் உயிருடன் உள்ளனரா, நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனரா? எந்த காரணத்திற்காக நீக்கப்பட்டனர் என்பதைத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. சில விவரங்கள் அரசியல் கட்சிகளுக்குப் பகிரப்பட்ட போதிலும், அது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
விவரங்களைத் தர முடியாது
கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களைச் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதாவது பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைத் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவரங்களைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "இந்தியச் சட்டங்களின்படி, இதுபோன்ற நடைமுறையில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலைப் பகிர வேண்டும் என எந்தவொரு சட்டம் அல்லது வழிகாட்டுதல்கள் இல்லை.. எனவே, மனுதாரர் இத்தகைய பட்டியலை ஒரு உரிமை போலக் கோர முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் பதில்
65 லட்சம் வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே ஏடிஆர் அமைப்பின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இருப்பினும், அதற்குத் தேர்தல் ஆணையம் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களுக்குத் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்படும் என மட்டும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கும் செயல்முறை நீக்கத்துக்கான காரணங்களைக் குறிப்பிட்டு நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
நடவடிக்கை எடுப்போம்
தேர்தல் ஆணையம் மேலும், "இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய, 2.5 லட்சம் தன்னார்வலர்கள் மக்களிடம் இருந்து தேவையான ஆவணங்களைப் பெற உதவுவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், தற்போதைக்கு ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களும், அவற்றைப் பெறுவதற்கான செயல்முறையில் உதவப்படுவார்கள். தகுதியான எந்த ஒரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தத் தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications