வரதட்சணை தடுப்பு சட்டம் போல்... பண மோசடி சட்டம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி : கைதானவரை சிறையிலேயே வைத்திருக்க சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை அமலாக்கத்துறை பயன்படுத்துகிறது. அந்த சட்டத்தின் நோக்கம் அப்படி இருக்க முடியாது. புகார் பதிவை ரத்து செய்த பிறகும் சிறையிலேயே வைத்திருப்பதுதான் அணுகுமுறை என்றால், நாம் என்ன சொல்ல முடியும்? வரதட்சணை தடுப்பு சட்ட வழக்குகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அதுபோல், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டமும் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொலைத்தொடர்பு அதிகாரி அருண்பதி திரிபாதி. இவர் அயற்பணியாக, சத்தீஸ்கர் மாநில வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தது. அப்போது, வாணிப கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மதுபான விற்பனையில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துது. அதுதொடர்பாக இந்திய தண்டனை சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.

அந்த வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. பண மோசடி தொடர்பான, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அருண்பதி திரிபாதியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் சத்தீஸ்கர்மாநிலத்தில் மத்திய தொலைத்தொடர்பு அதிகாரி அருண்பதி திரிபாதி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில், அருண் திரிபாதிக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கூடாது. தொழில்நுட்ப காரணங்களால் வஞ்சகர்கள் தப்பிவிடக்கூடாது. புகார் பதிவை நீதிமன்றம் ரத்து செய்தது, ஒப்புதல் பெறாத காரணத்துக்குத்தான். அதற்கும், ஜாமீனுக்கும் சம்பந்தம் இல்லை என்று வாதிட்டார்.
அவரது வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜால் புயன் ஆகியோர் கோபம் அடைந்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, புகார் பதிவை கோர்ட்டு ரத்து செய்தது அமலாக்கத்துறைக்கு தெரிந்தும், அத்தகவல் நீதிமன்றத்தில் மறைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் என்ன சமிக்ஞைகளை தெரிவிக்கிறது? புகார் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிறையில் இருக்கிறார். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வேண்டும். அமலாக்கத்துறை, தன்னை தூய்மையானதாக நிரூபிக்க வேண்டும்.
கைதானவரை சிறையிலேயே வைத்திருக்க சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை அமலாக்கத்துறை பயன்படுத்துகிறது. அந்த சட்டத்தின் நோக்கம் அப்படி இருக்க முடியாது. புகார் பதிவை ரத்து செய்த பிறகும் சிறையிலேயே வைத்திருப்பதுதான் அணுகுமுறை என்றால், நாம் என்ன சொல்ல முடியும்? வரதட்சணை தடுப்பு சட்ட வழக்குகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அதுபோல், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டமும் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் சத்தீஸ்கர் அரசு அதிகாரி அருண்பதி திரிபாதியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications