வேலையிலிருந்தா தூக்குற? தலைக்கேறிய கோபம்! முதலாளியை துப்பாக்கி மூலம் தீர்த்து கட்டிய முன்னாள் ஊழியர்
டெல்லி: டெல்லியில் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் தனது பழைய ஓனரை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை வேலையிலிருந்து நீக்கியதற்காக அவர் இவ்வாறு செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டெல்லி நொய்டாவை சேர்ந்தவர் ஷர்துல் இஸ்லாம். இவர் நொய்டாவின் பேஸ்-1 பகுதியில் NSB BPO எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் குறைந்த ஊதியத்திற்கு அதிகமான அளவில் ஆட்கள் வேலை செய்து வருகின்றனர். அப்படி இங்கு வேலை பார்த்த நபர்தான் அனூப் சிங். கடந்த சில வருடங்களாக இங்கு இவர் வேலை செய்து வந்திருக்கிறார். ஆனால் இவர் பணியில் பொறுப்பற்று இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஷர்துலுக்கும், அனூப்புக்கும் இடையே அடிக்கடி பிரச்னை மேலெழுந்திருக்கிறது. பணியில் முறையாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், அலுவலகத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ள கூடாது எனவும் ஷர்துல் பலமுறை அனூப்பை எச்சரித்துள்ளார். ஆனால் அப்படி இருந்தும் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது அனூப் தன்னுடைய விருப்பத்திற்கு பணியை செய்து வந்துள்ளார். ஒரு நாள் அனைவரின் முன்னிலையில் வைத்து அனூப்பை நிறுவனத்தின் முதலாளி ஷர்துல் எச்சரித்துள்ளார்.

பழிவாங்க முயற்சி
இது அனூப்புக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஷர்துலை பழிவாங்க வேண்டும் என்று பலமுறை இவர் முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. இப்படி ஒரு முறை முயற்சி செய்கையில் அனூப் கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை வேலையை விட்டு அனுப்பியுள்ளார் ஷர்துல். இருப்பினும் அனூப் தினமும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இது தொடக்கத்தில் ஷர்துலால் கவனிக்கப்பட்டாலும் நாளடைவில் எதுவும் நடக்காதது போல இருவரும் அவரவர் பணியை செய்து வந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு
ஆனால் அனூப் தான் பழிவாங்க வேண்டிய தருணத்திற்காக காத்திருந்திருக்கிறார். அந்த நாள்தான் ஜனவரி 04ம் தேதி. அதாவது நேற்று. வழக்கம் போல நேற்று அலுவலகம் வந்த அனூப் கையில் ஒரு பையை எடுத்து வந்துள்ளார். மாலை அனைவரும் பணியை முடித்துக்கொண்டு புறப்பட்டு செல்ல ஆயத்தமாகியுள்ளனர். அப்போதுதான் அனூப் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷர்துலுக்கு முன் நீட்டியுள்ளார். ஷர்துலுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம் ஷர்துல் நோக்கி துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே ஷர்துல் சரிய, அனூப் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சிசிடிவி
இவையனைத்தும் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அலுவலக ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஷர்துலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது உடலில் அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளதால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணம் அனூப் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அனூப் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தனிப்படைகள்
எனவே இவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உதவி ஆணையர் சுஷில் குமார் கங்கா பிரசாத் தெரிவித்துள்ளார். தனிப்படை குழுக்கள் அனூப்பின் நண்பர்கள், உறவினர்கள், சொந்த ஊர் என எல்லா இடங்களிலும் தேடுதல் வேட்டையை நடத்தும். மேலும், அவருடைய செல்போன் எண்ணை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார். தன்னை வேலையைவிட்டு அனுப்பியதற்காக தன்னுடைய முதலாளி மீது முன்னாள் ஊழியர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications