மக்களுக்கு இலவசங்கள் தரும் கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி.. கெஜ்ரிவால் கொடுத்த அதிரடி பதிலடி!
டெல்லி: இலவச கலாசாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 296 கிமீ நீளமுள்ள புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சுமார் 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2020இல் தேதி இந்த சாலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், வெறும் 28 மாதங்கள் ஒட்டுமொத்த சாலை அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

நரேந்திர மோடி
இந்த சாலை விரைவில் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, "உத்தரப் பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, இணைப்பு ஆகிய இரண்டையும் நாங்கள் மேம்படுத்தி உள்ளோம். பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பல மடங்கு மேம்பட்டு உள்ளது. அதேபோல பல்வேறு ஊர்களுக்கும் முறையான சாலை இணைப்பது வழங்குவதும் முக்கியம்.

வளர்ச்சி
அப்போது தான், மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும். இந்த இரண்டையும் கொடுத்துவிட்டால், தேவையான வளர்ச்சி விரைவாக ஏற்படும். நாங்கள் நகரங்களுக்கு மட்டுமின்றி கிராமங்களுக்கும் கூட வளர்ச்சியை எடுத்துச் செல்வோம். இதுவே மோடி மற்றும் யோகியின் அரசு. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இரட்டை இயந்திரம் போல உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது.

இலவசங்கள்
அரசியல் கட்சிகள் இங்கு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வாரி வழங்குகிறது. இது ஒரு ஆபத்தான கலாசாரமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆபத்தான கலாசாரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இந்த ஆபத்தான கலாசாரத்தை முன்னிறுத்துபவர்கள் புதிய விரைவுச் சாலைகளை, விமான நிலையங்களை ஏற்படுத்தவே மாட்டார்கள். அதாவது மக்களுக்கு உண்மையான வளர்ச்சி கிடைக்கவே கிடைக்காது" என்றார்.

டெல்லி முதல்வர் பதிலடி
இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால் கூறுகையில், "என் மீது சிலர் குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். ஆனால் எனது தவறு செய்தேன் என்று நான் கேட்க விரும்புகிறேன். டெல்லி அரசுப் பள்ளிகளில் 18 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு இலவச, தரமான கல்வியை நாங்கள் வழங்குகிறோம். அவர்களுக்கு இலவச, நல்ல கல்வியைக் கொடுத்ததுதான் நான் செய்த தவறா?

விமானம் வாங்கவில்லை
இதை எல்லாம் நாம் 1947,1950களிலேயே செய்து இருக்க வேண்டும். ஆனால், வேறுவழியின்றி நாங்கள் இப்போது அடித்தளத்தை அமைக்கிறோம். இது ஒன்றும் இலவச கலாசாரம் இல்லை. நான் செய்வது தவறு எனச் சொல்பவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து விமானம், தனியார் விமானங்கள் வாங்குகிறார்கள். ஆனால், நான் விமானம் எதையும் வாங்கவில்லை. டெல்லியில் எத்தனையோ திட்டங்களை இலவசமாக வழங்கினாலும், எங்கள் பட்ஜெட் லாபகரமாகவே உள்ளது. இதை நான் சொல்லவில்லை சிஏஜி அறிக்கை தான் கூறுகிறது.

என்ன தவறு செய்தேன்
இரண்டு கோடி மக்களுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கும் ஒரே மாநிலம் டெல்லி தான். சிகிச்சைக்கான முழுச் செலவையும் டெல்லி அரசே ஏற்கிறது. நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். எனது டிகிரி சான்றிதழ் போலியானது இல்லை. ஊழலை ஒழித்து, மக்களுக்கு நல்ல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளேன். இதில் நான் செய்த தவறு என்ன? சொல்லுங்கள்!

எது இலவசம்
இலவச கலாசாரம் என்றால் என்ன என்று நான் சொல்கிறேன் கேளுங்கள்.. பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கிய பெரிய நிறுவனம் கடன்களைத் திருப்பி செலுத்தவில்லை. இதனால் பல வங்கிகள் திவால் ஆனாது. அந்த குறிப்பிட்ட நிறுவனம் ஒரு அரசியல் கட்சிக்கு சில கோடிகள் நன்கொடை அளித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இது தான் இலவச கலாசாரம். உங்கள் நண்பர்களின் ஆயிரக்கணக்கான கோடி கடனை நீங்கள் தள்ளுபடி செய்யும்போது, அது தான் இலவச கலாசாரம்" என்று அவர் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications