வருமான வரி விலக்கு டூ பெண்களுக்கு நிதி உதவி வரை! மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 10 விஷயங்கள்
சென்னை: 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் வெளியாக உள்ள அறிவிப்புகள் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளன. உள்கட்டமைப்பு, விவசாயம், MSMEகள் மற்றும் பிற முக்கியமான துறைகளை மேம்படுத்த உதவும் அறிவிப்புகள் இதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. ரயில்வே, சாலைகள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 10 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

1. கடந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரி மாற்றப்படவில்லை. இந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரியில் பழைய முறையை நீக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள், அதாவது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம்.
பழைய வரி விதிப்பு முறை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்படலாம். இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2. அதேபோல் புதிய வரி முறையில் சலுகைகள் அதிகரிக்கப்படலாம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
₹10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி விலக்கு உறுதி, ₹15 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரி ஸ்லாப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாம். நடைமுறையில் உள்ள புதிய வருமான வரி முறையில் 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். அதை மொத்தமாக விலக்கி அரசு சட்டம் கொண்டு வரலாம் என்கிறார்கள்.
3. யூனியன் பட்ஜெட்டில் ரயில்வே துறை அதிக ஒதுக்கீட்டைக் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வந்தே பாரத் சேவைகள், புதிய நீண்ட தூர சேவைகள், ரயில்வே சொத்துக்களை மறுசீரமைத்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 இல் செய்யப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிக ஒதுக்கீடு ஆகும் இது. இந்த ஆண்டு நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்புக்கு அதை விட அதிக ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. நடப்பு நிதியாண்டில் மூலதனச் செலவினங்களுக்காக 1.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
4. தமிழ்நாடு மட்டுமன்றி நாடு முழுக்க புதிய எக்ஸ்பிரஸ் வே சாலைகள் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2024 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும்.
இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே இந்தியாவில் 2002 இல் தொடங்கப்பட்ட முதல் 6-வழி செயல்பாட்டு விரைவுச்சாலை ஆகும். தற்போது, இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே, மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே (கட்டம்-II) 600 கிமீ (370 மைல்), 2022 இல் திறக்கப்பட்டது மற்றும் (கட்டம்-II) மே 2023 இல் திறக்கப்பட்டது. மற்றும் 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 14 பாதைகள் கொண்ட டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி - தஸ்னா (யுபி எல்லை) பிரிவில் அகலமான விரைவுச்சாலையாக உள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டில் புதிய எக்ஸ்பிரஸ் வே அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
5. செல்போன், டிவிக்கள் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.
6. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.
7. இஸ்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், புதிய விமான நிலையங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
8. நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படுவது தொடர்பாக அறிவிக்கப்படலாம். அதேபோல் மின்சார வாகனங்களுக்கான சலுகைகள் அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
9. பெட்ரோல், டீசல் விழி குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை மத்திய அரசு நெருங்கி வருகிறது. இதோ புதிதாக தற்போது டீசலில் 5% எத்தனாலை (ED-5) கலக்கும் புதிய திட்டத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.
பிரதமர் மோடி இது தொடர்பாக கடந்த வாரம் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களுடனும் புதிய திட்டம் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் மாதத்தில், பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 15.9% ஆக இருந்தது. டீசலில் எத்தனாலைக் கலப்பதற்குத் தேவையான தொழிற்சாலை ஒன்றை அரசாங்கம் கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
டீசலில் எத்தனால் கலப்பதால் செலவு குறையம். மைலேஜ் மாற்றம் அடையாது. அது சுற்றுச்சூழலுக்கு நல்லது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும். இதனால் பெட்ரோல் ; டீசல் விலை குறையும். பொதுவாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரித்து பொருட்களின் விலை குறையும்.
10.பெண்களுக்கான திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். மிஷன் சக்தி, மாத்ரு வந்தனா யோஜனா மற்றும் ஜனனி சுரக்ஷா யோஜனா போன்ற பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு அதிக நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications