'இந்தியா' பெயர்தான் காரணமா? ஜி20 விருந்து அழைப்பு விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் சுளீர் கேள்வி
டெல்லி: ஜி 20 மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியுள்ள நிலையில், மாநாட்டு பிரதிநிதிகளுக்கு இன்று இரவு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கிறார். இந்த விருந்துக்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராமும் கண்டனம் தெரிவித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. உலகின் மிகவும் வலிமை வாய்ந்த நாடுகளாக உள்ள இந்த இரண்டு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்திருப்பது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது.
மற்றொருபுறம் பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் நேற்றே இந்தியா வந்து சேர்ந்தனர். இந்நிலையில் இன்று மாநாடு கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. முதல்நாள் மாநாட்டின் இறுதியில், அதாவது இன்று இரவு மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க முன்னாள் பிரதமர், அனைத்து மாநில முதலமைச்சர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் X சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "உலக தலைவர்களுக்கான அரசு விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவரை அழைக்காததை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியா, அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். முன்னதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பெல்ஜியத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது" என்று கூறியிருந்தார். தற்போது ப.சிதம்பரம் கருத்தை தொடர்ந்து நடிகை காயத்திரி ரகுராம் கூட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சப்போரட் செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் X சோஷியல் மீடியா பேஜில் எழுதியுள்ளதாவது, "G20 என்பது N.D.A கூட்டணிக்கான அழைப்பு மட்டுமே, இந்தியா என்று பெயர் வைத்திருப்பதால் இந்திய கூட்டணிக்கு அழைப்பு இல்லையா? எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா எம்.பி.க்கள் முறையாக அந்தந்த மாநிலத்தின்படி அவர்கள் நியமிக்கப்பட்டனர். பாரதத்தின் ஜனாதிபதி என அழைப்பிதழ் அனுப்பப்பட்டது, அதற்காக பாரதீய ஜனதா கட்சிக்கு மற்றும் அவர்களின் கூட்டணி ஆதரவாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் மட்டும்தானா பாரதத்தின் குடிமக்கள்? கூட்டணிக் கூட்டாளியின் தலைவர் மூத்த தலைவர் திரு. கார்கே அழைக்கப்படவில்லை. இதுதான் சமத்துவமா? இது அரசியலமைப்பு தர்மமா? இது சனாதன தர்மமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications