வரலாறு காணாத ஜிடிபி சரிவு: நீங்க செஞ்ச தப்புக்கு ஏன் கடவுள் மீது பழி போடுறீங்க?ப.சிதம்பரம் பாய்ச்சல்
டெல்லி: வரலாறு காணாத வகையில் இந்தியாவின் ஜிடிபி 24% சரிவை எதிர்கொண்டிருப்பது மனிதர்களால் நிகழ்ந்த பேரழிவுதான்...இதற்கு ஏன் கடவுளின் மீது பழியைப் போட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யானது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 23.9% சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சரிவு.
ஆனாலும் கொரோனா லாக்டவுன் அமலில் இருந்ததால் இந்த சரிவு ஏற்பட்டது; இனிவரும் காலங்களில் நிலைமை சரியாகிவிடும் என கூறி வருகிறது மத்திய அரசு. ஆனால் பொருளாதார சரிவு தொடர்பாக ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சி தலைவர்கள் பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவுதான் இந்த பேரழிவு என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒப்புக் கொள்ளமாட்டார்கள்
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இது தொடர்பாக திங்கள்கிழமையன்று கூறுகையில், இது மத்திய அரசுக்கு பெரும் அவமானம்; ஆனால் இந்த அவமானத்துக்காக வெட்கப்படவும் மாட்டார்கள்; தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளவும் மாட்டார்கள் என கொந்தளித்திருந்தார். இதேபோல் என்டிடிவி சேனலுக்கு ஜிடிபி சரிவு தொடர்பாக ப. சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

கடவுள் எப்படி காரணமாவார்?
பொருளாதார சீர்குலைவுக்கு கடவுள் மீது பழியை போடுகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (கொரோனா என்பதே கடவுளின் செயல் என கூறியிருந்தார் நிர்மலா சீதாராமன்.). ஆனால் இந்த தேசத்தின் விவசாயிகளுக்கு கடவுளின் ஆசீர்வாதம் உண்டு என்பது வேளாண்துறையில் மட்டும் காணப்பட்டிருக்கும் வளர்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறது. கொரோனா பரவல் என்பது இயற்கையான பேரழிவு. ஆனால் இயற்கைப் பேரழிவின் பெயரால் நீங்கள் - மனிதர்களால் பொருளாதாரத்தில் பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தலைமை பொருளாதார ஆலோசகர்
நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கூறுகிறார். அவரது கருத்தை யாராவது சீரியசாக எடுத்துக் கொள்கிறார்களா என்ன? நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் கடைசியாக பிரதமர் மோடியுடன் எப்போதுதான் ஆலோசனை நடத்தினார்? சுப்பிரமணியனின் ஒவ்வொரு கருத்தையும் ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளே மறுக்கின்றன.

மக்கள் கைகளில் பணம் தேவை
ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான ஆத்மநிர்பார் நிதி உதவி என்பது வெறும் நகைச்சுவையே தவிர வேறு எதுவுமே இல்லை. ஏழைகளின் கைகளில் பணம் இருந்தால்தான் நுகர்வு சக்தி அதிகமாகும். அதற்கான நடவடிக்கைகளே இப்போதைய தேவை. இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications