ராஜ்யசபாவில் மோடியின் உருக்கமான பேச்சு...பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராகிறாரா குலாம்நபி ஆசாத்?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் துணை ஜனாதிபதி வேட்பாளராக குலாம்நபி ஆசாத் அறிவிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா எம்பி பதவி காலம் வரும் 15-ந் தேதி முடிவடைகிறது. இதையொட்டி ராஜ்யசபாவில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரதமர் மோடி உருக்கம்
இதில் பேசிய பிரதமர் மோடி, குலாம்நபி ஆசாத் குறித்து நெகிழ்ச்சியாக பேசினார். ஒருகட்டத்தில் உங்களுக்காக எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும் உங்களது பணி தொடர வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.

பாஜகவில் ஆசாத்?
பிரதமர் மோடியின் இந்த உருக்கமான உரை பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே பாஜகவுடன் மென்மை போக்கை குலாம்நபி ஆசாத் கடைபிடிப்பதாக காங்கிரஸ் கட்சிக்குள் விமர்சனம் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சை முன்வைத்து பாஜகவில் குலாம்நபி ஆசாத் இணையக் கூடும் என தகவல்கள் வெளியாகின.

பாஜகவில் ஐக்கியமா? ஆசாத் பதில்
ஆனால் ஜம்மு காஷ்மீரில் கறுப்பு பனி எப்போது பெய்யுமோ அப்போது பாஜகவில் சேருவேன் என குலாம்நபி ஆசாத் பதில் கொடுத்திருக்கிறார். மேலும் பிரதமர் மோடிக்கும் தமக்குமான தொடர்புகள் எப்படியானது என்பதையும் குலாம்நபி ஆசாத் விவரித்தும் இருக்கிறார்.

துணை ஜனாதிபதி வேட்பாளர்
அதேநேரத்தில் குலாம்நபி ஆசாத், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை ஜனாதிபதிதான் ராஜ்யசபா தலைவராகவும் இருப்பார். தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.