சட்டசபையில் மீண்டும் வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுங்கள்- அன்புமணி ராமதாஸ் அதிரடி
டெல்லி: தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.5% உள்ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் மீண்டும் வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அன்புமணி "10.5% இடஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில சாதகங்கள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறு என உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.

இடஒதுக்கீடு ரத்தாக காரணம்
ஒரே ஒரு காரணத்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உள்ளது. "இடஒதுக்கீடு தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை என்பதே சட்டம் ரத்து செய்யப்பட காரணம். அது தொழில்நுட்ப பிழை.இது ஒரு முடிவு கிடையாது. தொடர்ச்சிதான். வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்து புள்ளிவிபரங்களை சேகரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

மீண்டும் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்
அதன் பின்னர் உடனடியாக சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்து இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இதை தமிழக அரசு நிச்சயமாக செய்யலாம். தமிழக அரசுக்கு அந்த அதிகாரங்கள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. இடஒதுக்கீடையும் உள்ஒதுக்கீட்டையும் ஒரு தனிப்பட்ட சமுதாயத்துக்கு மாநில அரசு கொண்டு வரலாம் என்றும், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி உள்ளது.

42 ஆண்டுகால போராட்டம்
விரைவில் தமிழக அரசு புள்ளிவிபரங்களை சேகரித்து தமிழக சட்டமன்றத்தில் சட்டத்தை கொண்டு வந்து வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை முதல்கட்டமாக தர வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
கடந்த 42 ஆண்டுகளாக ராமதாஸ் அவர்கள் போராடி, லட்சக்கணக்கானோர் சிறை சென்று, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, பல தியாகங்கள் செய்து கிடைத்தது இந்த இடஒதுக்கீடு. இது ஒரே நாளில் வந்தது இல்லை.

எந்த சமுதாயத்துக்கும் புள்ளிவிபரம் இல்லை
எங்கள் வாழ்க்கையே போராட்டம்தான். இனியும் போராடுவோம். தமிழ்நாடு அரசு இதை புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். அருந்ததியர்கள் உள் ஒதுக்கீட்டுக்கு எந்த புள்ளிவிபரமும் கிடையாது. இஸ்லாமியர்கள் உள் ஒதுக்கீட்டுக்கு எந்த புள்ளிவிபரமும் இல்லை. 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கும் எந்த புள்ளிவிபரமும் கிடையாது. எந்த மாநிலத்திலும், எந்த சமூகத்துக்கும் இடஒதுக்கீடு வழங்க புள்ளிவிபரங்கள் இல்லை.

மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம்
வன்னியர்களுக்கு மட்டும் ஏன் புள்ளிவிபரம் கேட்கிறார்கள்? தமிழ்நாடு அரசு எங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.நாங்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை. 1984 ஆம் ஆண்டு அம்பாசங்கர் குழு வீடுவீடாக சென்று ஆய்வு செய்த புள்ளி விபரமும், 1969 சட்டநாதன் குழு கொடுத்த புள்ளி விபரங்களும் உள்ளன.
சென்னைக்கு சென்று ராமதாஸ் அவர்களிடம் பேசிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்தித்து கோரிக்கை வைப்பது குறித்தும் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்தும் முடிவு செய்வோம்." என்றார்.












Click it and Unblock the Notifications