பியூஷ் ஜெயின், புஷ்பராஜ் ஜெயின்- ரூ257 கோடி கான்பூர் ரெய்டு விவாகரத்தில் 'நோ' குழப்பம்... அதிகாரிகள்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரிகள் சமாஜ்வாதி கட்சியின் புஷ்பராஜ் ஜெயினுக்குப் பதிலாக பாஜகவுடன் தொடர்புடைய பியூஷ் ஜெயின் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுவதை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
கான்பூரில் பியூஷ் ஜெயின் என்ற வாசனை பொருட்கள் வியாபாரி வீட்டில் அண்மையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பியூஷ் ஜெயின் வீட்டில் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ257 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

120 மணிநேரம் ரெய்டு
இந்த சோதனை மொத்தம் 120 மணிநேரம் நடைபெற்றது. பியூஷ் ஜெயின் வீட்டில் கத்தை கத்தையாக ரூ257 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

தேர்தல் களத்தில் எதிரொலி
உ.பி.யில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பியூஷ் ஜெயினுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் தொடர்பு உள்ளது என குற்றம்சாட்டினர். ஆனால் அகிலேஷ் யாதவ் இதனை திட்டவட்டமாக மறுத்ததுடன் புதிய குண்டு ஒன்றை வீசினார். அதாவது தமது கட்சியின் புஷ்பராஜ் ஜெயினை குறி வைத்துதான் அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் சோதனை நடத்தியது பாஜகவுடன் தொடர்புடைய பியூஷ் ஜெயின் வீட்டில்.. என அதிர வைத்தார்.

புஷ்பராஜ் ஜெயின் விளக்கம்
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு கலாய்த்திருந்தார். இதனிடையே சமாஜ்வாதி கட்சியின் புஷ்பராஜ் ஜெயின் கூறுகையில், எனக்கும் பியூஷ் ஜெயினுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிகாரிகள் சோதனை நடத்திய விவகாரத்தில் என் பெயரை பயன்படுத்துவது மோசமான அரசியல். ப.சிதம்பரம் குறிப்பிடுவதைப் போல அதிகாரிகள் என்னை இலக்கு வைத்து சோதனை நடத்த வந்திருக்கலாம் என கூறினார்.

டார்கெட்டே பியூஷ் ஜெயின்தான்
ஆனால் ஜிஎஸ்டி அதிகாரிகளோ இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். Shikhar Pan Masala group என்ற நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்தான் Ganapati Road Carriers என்ற போக்குவரத்துசார் நிறுவனத்திலும் பியூஷ் ஜெயினின் Odochem Industries நிறுவனத்திலும் சோதனை நடத்தினோம். Shikhar Pan Masala group நிறுவனத்துக்கு பியூஷ் ஜெயின், வாசனை பொருட்களை சப்ளை செய்து வந்தவர். அந்த நிறுவனத்திடம் இருந்து ரொக்கமாகவே மட்டும் பணத்தைப் பெற்று வந்ததால் அவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications