அதானி குழும முறைகேடுகளை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 6 பேர் குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!
அதானி குழும மோசடிகள் குறித்து விசாரிக்க வல்லுநர் குழுவை அமைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் மீது விரிவான விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் 6 வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வல்லுநர் குழு அடுத்த 2 மாதத்தில் விசாரணையை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகளை மோசடியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டின் சாராம்சம். மேலும் அதானி குழுமத்தின் பெருமளவு கடன்கள் குறித்தும் விவரித்திருந்தது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமம் பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. அதானி குழுமத்தின் எஸ்பிஐ, எல்ஐசி முதலீடுகள் செய்துள்ளன. இதனால் அதானி குழும மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின.
அதேநேரத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்ஹா, ஜேபி பர்திவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் 10-ந் தேதி நடத்தப்பட்ட விசாரணையின் போது, ஹிண்டன் பர்க் அறிக்கை குறித்தும் பங்கு சந்தையில் முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாக்க உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் வல்லுநர் குழு அமைப்பது தொடர்பான யோசனையை மத்திய அரசிடம் நீதிபதிகள் முன்வைத்தனர். இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசானது, சீலிடப்பட்ட உறை ஒன்றில் வல்லுநர் குழு விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த வழக்கில் வெளிப்படைத்தன்மை தேவை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுத நெறிமுறைகள் அவசியமானவை. அதானி குழுமம்- ஹிண்டர்பர்க் அறிக்கை, முதலீட்டாளர்கள் நலனை பாதுகாக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக விசாரித்து பரிந்துரைக்க முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் 6 வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில் முன்னாள் நீதிபதி தேவதர் , வங்கிதுறை வல்லுநர் கேவி காமத், முன்னாள் எஸ்பிஐ சேர்மன் ஓபி பட், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீல்கேணி, மூத்த வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது விசாரணையை நிறைவு செய்து 2 மாதத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications