ஓரினச் சேர்க்கை திருமண அங்கீகார வழக்கு- விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் போராட்டம்
டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கவே கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் முன்பாக இந்துத்துவா ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பது திருநங்கையர் போல தனி சமூகமாக உருவெடுத்து கொண்டிருக்கின்றனர். உலக நாடுகள் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தும் வருகின்றன.
ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தையும் சொல்லாடலும் இந்தியாவில் வெறுப்புக்குரியதாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கான குரல்கள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கின்றன. இந்தப் போராட்டங்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கியது. ஓரினச் சேர்க்கையாளர்களின் உறவுகளை தவறு இல்லை என்பதுதான் அந்த உத்தரவு.

இன்னொரு பக்கம், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களும் நடந்து வருகின்றன. ஆனால் இந்த திருமணங்களுக்கான அங்கீகாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கோரி பல மாநிலங்களின் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இத்தகைய முயற்சிகளை இந்துத்துவவாதிகள் கடுமையாக எதிர்க்கவும் செய்கின்றனர். நாடாளுமன்றத்திலேயே ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக மிரட்டல்களை இந்துத்துவா எம்பிக்கள் விடுத்ததை நாடும் பார்த்தது.
இந்நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே இனி விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரிக்கும். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமண அங்கீகாரம் குறித்து மத்திய அரசு பிப்ரவரி 15-ந் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மார்ச் 13-ந் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக இன்று காலை உச்சநீதிமன்ற வளாகத்தில் இந்துத்துவா அமைப்பினர் சிலர் ஒன்று கூடினர். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க் கோரும் வ்ழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கவே கூடாது; அது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications