'முஸ்லிம்களுக்கு பிறகு, இந்துத்துவா படைகளின் இலக்கு கிறிஸ்தவர்கள்'.. மத்திய அரசை தாக்கிய ப.சிதம்பரம்
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தினார். மேற்கு வங்கத்தில்
அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வங்கி கணக்குகள் அனைத்தையும் மத்திய அரசு கிறிஸ்துமஸ் தினத்தில் முடக்கிவிட்டதாக மம்தா தெரிவித்தார்.
இதனால் 22,000 பேர் உணவும் மருந்துகளும் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர் என்று டுவிட்டர் மூலம் மம்தா கூறி இருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

வங்கி கணக்குகள் முடக்கம்
சிறுபான்மையின மக்கள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்களும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்தது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2010 மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011-ன் கீழ் உள்ள தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததற்காக மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழான புதுப்பித்தல் விண்ணப்பம் டிசம்பர் 25, 2021 அன்று நிராகரிக்கப்பட்டது.

உள்துறை அமைச்சகம் விளக்கம்
சில பாதகமான உள்ளீடுகள் கவனிக்கப்பட்டதால் இதனை கருத்தில் கொண்டுதான் புதுப்பித்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை. இப்படி பதுபித்தலில் மட்டுமே சிக்கல் உள்ள நிலையில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் எந்தக் கணக்குகளையும் உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கியது.

ப.சிதரம்பரம் தாக்கு
இந்த நிலையில் இதனை வைத்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதரம்பரம் முஸ்லீம்களுக்குப் பிறகு, இந்துத்துவா படைகள் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்துள்ளன என்று பரபரப்பு குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்துத்துவா படைகளின் புதிய இலக்கு
மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தொடர்பான விவகாரத்தை பிரதான ஊடகங்கள் மறைத்து விட்டதை நீங்கள் கவனித்தீர்களா? ஊடகங்களின் இந்த செயல் வேதனைபடக்கூடியது. வெட்ககேடானது. மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி புதுப்பித்தலை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது இந்தியாவின் 'ஏழைகள் மற்றும் எளிய மக்களுக்கு சிறந்த சேவை செய்யும் என்ஜிஓ.க்கள் மீதான நேரடி தாக்குதலாகும். இது கிறிஸ்தவ தொண்டு பணிகளுக்கு எதிரான எதிர்ப்பை காட்டுகிறது. முஸ்லீம்களுக்குப் பிறகு, இந்துத்துவா படைகளின் புதிய இலக்கு கிறிஸ்தவர்கள்' என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications