‛ராகுல் செய்த பெரிய தவறு’.. ‛இந்தியா’ கூட்டணி உடைய காரணமானது எப்படி? அல்லாடும் காங்கிரஸ்.. பரபர தகவல்
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிறங்க எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு தாவ உள்ளார். இதனால் ‛இந்தியா' கூட்டணி உடைந்துள்ள நிலையில் அதற்கு ராகுல் காந்தி முக்கிய காரணமாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது. ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி பாகுபாடுகளை மறந்து 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்பு இல்லை என நினைத்த பாஜக மேலிடத்துக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்தது. மேலும் பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லியில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை என்பது பாஜகவை கலங்க வைத்தது.
ஆனால் தற்போது பாஜக நிம்மதியடைந்துள்ளது. இதற்கு ‛இந்தியா' கூட்டணியில் ஏற்பட்டுள்ள பெரிய குழப்பம் தான் காரணம். அதாவது ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும் என பகவந்த் மான் கூறியுள்ளார். மாறாக பீகாரில் லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் தனது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுடன் கைகோர்த்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க வேண்டும் என்றால் இந்த 2 மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது மிகவும் முக்கியம். ஆனால் தற்போது அந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியின் குழப்பத்துக்கும், கூட்டணி உடைந்ததற்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மிகவும் முக்கிய காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதாவது விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி உள்ளார். மொத்தம் 66 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி 6,713 கிலோமீட்டர் தொலைவை கடந்து மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிக்கிறார். இந்த யாத்திரையானது மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா என
15 மாநிலங்களில் நடக்கிறது.
மொத்தம் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக நடைபெற உள்ளது. இந்த யாத்திரையை அந்த மாநிலங்களை சேர்ந்த ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விரும்பவில்லை. இந்த 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு கட்டமைப்பு உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி செல்லும் யாத்திரை இருமாநிலங்களிலும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர்கள் நினைத்தனர்.
மேலும் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் ஆகியோர் ‛இந்தியா' கூட்டணியின் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும். நவம்பர் மாதத்துக்குள் தொகுதி பங்கீட்டில் அனைத்து மாநிலங்களிலும் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை கண்டுக்கொள்ளவில்லை. சோனியா காந்தி வயது முதிர்வு மற்றும் உடல்நல பிரச்சனையால் ஆக்டிவ்வாக செயல்பட முடியாத நிலையில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதி பங்கீட்டில் ஆர்வம் காட்டவில்லை.
சமீபத்தில் நடந்த முடிந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, மிசோராம் மாநில தேர்தல்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டியது. அதிலும் ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆலோசனைகளை பெறவில்லை. அதோடு மத்திய பிரதேசத்தில் அகிலேஷ் யாதவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. இந்த 5 மாநில தேர்தல்களில் கவனம் செலுத்திய காங்கிரஸால் ‛இந்தியா' கூட்டணியின் செயல்பாட்டில் மந்தமான நிலை ஏற்பட தொடங்கியது. இதுவும் ‛இந்தியா' கூட்டணி தலைவர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
மேலும் தேர்தல் முடிந்த பிறகும் கூட காங்கிரஸ் கட்சி என்பது கூட்டணி பங்கீடு செய்யாமல் இழுத்தடித்து வந்தது. இதில் ராகுல் காந்தி நேரடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. மாறாக அவர் யாத்திரையை தொடங்கினார். இது மிகப்பெரிய தவறாக அமைந்துள்ளது. மாறாக ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டணி பங்கீட்டை சுமூகமாக பேசி முடித்துவிட்டு யாத்திரையை தொடங்கி இருந்து இருக்கலாம். கூட்டணி உடன்பாட்டுக்கு பிறகான அவரது யாத்திரை என்பது கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக இருக்கும். ஆனால் அவர் அப்படி செய்ய தவறிவிட்டார். இதனால் ‛இந்தியா' கூட்டணி உடைந்ததற்கும் ராகுல் காந்தியும் முக்கிய காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications