எவ்வளவு நேரம் மனைவியையே பார்த்துட்டு இருப்பீங்க? வாரம் 90 மணி நேரம் வேலை செய்யனும்.. எல்&டி தலைவர்
டெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பேசியது விவாதப்பொருளாகி வரும் நிலையில், எல்& டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் இதற்கு ஒரு படி மேலே சென்று வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் ஞாயிற்றுக்கிழமை லீவு கூட இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளிலும் ஊழியர்களின் நலன் கருதி வேலை நேரத்தை குறைப்பது பற்றி ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், சமீபத்தில் பேசிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசினார். இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் கடினமாக உழைக்கவில்லை என்றால் யார் உழைப்பார்கள்? என்று பேசியிருந்தார்.

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் இந்த பேச்சை பலரும் விமர்சித்து இருந்தனர். work life - balance பாதிக்கப்படும் என நாரயணமூர்த்தி கருத்து குறித்து பலரும் பேசியிருந்தனர். இந்த நிலையில், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை போதாது 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் எல்&டி நிறுவன தலைவர் எஸ்.என் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களிடையே எஸ்.என் சுப்பிரமணியன் பேசும் வீடியோ ரெட்டிட் இணையதளத்தில் பரவி வருகிறது. அதில் அவர் கூறியதாது:- வீட்டில் இருந்து கொண்டு என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவியையே எவ்வள்வு நேரம் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? அலுவலகத்திற்கு வேலை செய்யுங்கள்" என்று கூறுகிறார். மேலும் தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் சுப்ரமணியன் பேசும் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், சமீபத்தில் சீன நபர் ஒருவருடன் நான் பேசினேன். அவர் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும். அமெரிக்காவில் 50 மணி நேரம் வேலை செய்யும் நிலையில் சீனர்கள் 90 மணி நேரம் வாரத்திற்கு வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையை விடுமுறையை கூட எடுக்காமல் வேலை செய்யலாம். வீட்டில் குறைவான நேரத்தை செலவிட்டு அலுவலகத்தில் அதிக நேரத்தை செலவிடுங்கள்.
உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைத்தால் மகிழ்ச்சி அடைவேன். ஏனெனில் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்து இருக்கிறேன்" என்றார். எனினும் சுப்ரமணியன் எப்போது இவ்வாறு பேசினார் என்ற விவரம் தெரியவில்லை. எல்&டி தலைவரின் பேச்சை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
அண்மையில் தொழிலதிபர் அதானி, வாரத்திற்கு 70 மணி நேர வேலைக்கு எதிராக பேசியிருந்தார். அதானி கூறுகையில், வேலை - வாழ்க்கை சமநிலை என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொருக்கும் வேறுபடும். சிலருக்கு வீட்டில் 4 மணி நேரம் செலவிட்டால் போதும். சிலருக்கு 8 மணி நேரம் செலவிட வேண்டும் என நினைப்பார்கள். எனவே, உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் செய்யும்போது உங்கள் வேலையும் வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்கும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications