பாகிஸ்தானில் ஒருநாள் அப்படி நடந்தாலும்..நான் வியப்படைய மாட்டேன்..ட்விட்டரில் பொங்கிய தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: பாகிஸ்தானை ஒருநாள் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் நான் வியப்படைய மாட்டேன் என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வரும் சம்பவங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்
பாகிஸ்தானின் பாதுகாப்பு சோதனை பாயிண்ட்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இத்தகைய தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பின்பற்றும் கிட்டதட்ட ஒரே மாதிரியானவைதான் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் ஒருபக்கம் பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டு இருக்கும் நிலையில், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களும் அந்த நாட்டிற்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.

9 பேர் கொல்லப்பட்டனர்
இந்த சூழலில், பாகிஸ்தானில் நேற்று கராச்சி நகரில் போலீஸ் தலைமையகத்தை தெஹ்ரீக் இ தாலிபான் (பாகிஸ்தான்) பயங்கரவாதிகள் தாக்க முயற்சித்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் தாலிபன்களே
இந்த நிலையில் கராச்சி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், பாகிஸ்தானை ஒருநாள் தலிபான்கள் கைப்பற்றினாலும் நான் வியப்பு அடைய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஸ்லிமா நஸ்ரின் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தேவையில்லை. பாகிஸ்தானை வன்முறை களம் ஆக்க பாகிஸ்தான் தாலிபன்களே திறன் கொண்டவர்கள்தான்.

நாட்டில் இருந்து வெளியேறினார்
பாகிஸ்தானை ஒருநாள் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் நான் வியப்படைய மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார். வங்காளதேச நாட்டை சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின் இஸ்லாமியர்களுக்கு எதிரான பார்வையுடன் செயல்படுவதாக விமர்சனம் எழுந்தது. அடிப்படைவாதிகள் தஸ்லிமா நஸ்ரினுக்கு கொலை மிரட்டல் விடுத்தததால் வங்காளதேச நாட்டில் இருந்து 1994- ஆம் ஆண்டு வெளியேறினார். தற்போது தஸ்லிமா நஸ்ரின் டெல்லியில் வசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications