அய்யோ போச்சே.. சல்லிசல்லியா நொறுங்கிய கார்! எலுமிச்சையை டயரில் ஏற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
டெல்லி: ரூ.27 லட்சம் மதிப்பிலான ‛மஹிந்திரா தார்' காரை வாங்கிய பெண் ஷோரூமின் முதல் தளத்தில் டயரின் அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்க முயன்றார். அப்போது அதிகளவில் ஆக்ஸிலேட்டர் கொடுத்ததால் அந்த புதிய கார் முதல் தளத்தின் கண்ணாடி சுற்றை உடைத்து கொண்டு தரைதளத்தில் விழுந்து நொறுங்கியது.
ஒவ்வொருவருக்கும் சொந்தமாக கார் வாங்கி அதில் பயணிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்த கனவு அனைவருக்கும் கைகூடுவது இல்லை. சிலருக்கு சிறிது காலத்துக்கு பிறகு இந்த கனவு பலிக்கலாம். சிலருக்கு வயதான காலத்தில் கனவு நனவாகலாம். இன்னும் சிலருக்கு கார் வாங்கும் வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம்.

ஆனால், டெல்லியை சேர்ந்த 29 வயது நிரம்பிய மணி பவார் என்ற பெண் அதிர்ஷ்டக்காரர். அவர் சொந்தமாக மஹிந்திரா தார் காரை வாங்க நினைத்தார். இது அவருக்கு பெரும் கனவாக இருந்தது. இந்த கனவு கைகூடும் நேரம் நேற்று வந்தது.
மணி பவார், நேற்று முன்தினம் மாலையில் டெல்லி நிர்மான் விகார் பகுதியில் உள்ள மஹிந்திரா ஷோரூமுக்கு சென்றார். ரூ.27 லட்சம் மதிப்பிலான தார் காரை அவர் வாங்கினார். கார் முதல் தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. கனவு கார் என்பதால் பூஜைகள் செய்து அந்த காரை ஷோரூமை விட்டு இறக்க மணி பவார் விரும்பினார். இதையடுத்து பூஜைகள் செய்யப்பட்டன.
அதன்பிறகு காரின் டயரில் எலுமிச்சை பழங்களை வைத்து நசுக்கிவிட்டு காரை வீட்டுக்கு எடுத்து செல்ல முடிவு செய்தார். அதன்படி டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டது. காரில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து இருந்த மணி பவார் லேசாக காரை முன்நோக்கி நகர்த்த முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக Accelerator-யை அதிகமாக கொடுத்தார்.
இதனால் கார் முதல் தளத்தின் கண்ணாடி சுவற்றை உடைத்து கொண்டு பாய்ந்து தரைதளத்தில் விழுந்தது. இதில் கார் நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications