வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் 2.4 மடங்காக அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?
டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 2.4 மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கடந்த பத்து ஆண்டுகளில், நேரடி வரி வருவாய் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.4 மடங்காக அதிகரித்துள்ளது.

புதிய வரி விதிப்பு முறையின் கீழ், வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. 2013-14 நிதியாண்டில் ரூ. 2.2 லட்சமாக இருந்த வருமான வரி வரம்பு தற்போது ரூ.7 லட்சம் வரை அதிகரித்துள்ளது. சில்லரை வணிகங்களுக்கான உத்தேச வரி விதிப்புக்கான வரம்பு ரூ. 2 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பெருநிறுவன வரி தற்போதுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், சில புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியது. பல புதிய நடைமுறைகள், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதை எளிமையாக்கியுள்ளன. 2013-14 ஆம் ஆண்டில் 93 நாட்களாக இருந்த வருமான வரிக் கணக்கு சரிபார்ப்பு செயலாக்க நடைமுறைக்கான கால அளவு, தற்போது வெறும் 10 நாட்களாகக் குறைந்துள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications