Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லேப்டாப் ஹேக் செய்யப்பட்டு சதி ஆவணங்கள் புகுத்தப்பட்டன! பாதிரியார் ஸ்டேன் சுவாமி அப்பாவி? ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு எதிரான ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என அமெரிக்காவை சேர்ந்த தடயவியல் நிறுவனம் அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஸ்டேன் சுவாமியின் லேப்டாப்பில் ஹைக்கர்களால் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட பல சதி ஆவணங்கள் புகுத்தப்பட்டதாகவும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது அந்த தடயவியல் நிறுவனம்.

இந்த தடயவியல் நிறுவனத்தின் அறிக்கையால் என்ஐஏ இதுவரை ஸ்டேன் சுவாமி மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து என்ஐஏ உயரதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

யார் இந்த ஸ்டேன் சுவாமி?

யார் இந்த ஸ்டேன் சுவாமி?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டேன் சுவாமி. சிறு வயதிலேயே சமூக தொண்டில் ஈடுபடுவதிலும், எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுவதிலும் ஆர்வம் காட்டினார் ஸ்டேன் சுவாமி. அதே சமயத்தில், ஏசுநாதர் மீதான பக்தியால் இறையியல் படிப்பையும் முடித்து பாதிரியாராக மாறினார். பாதிரியாராக மாறிய பின்னரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதை ஸ்டேன் சுவாமி நிறுத்திக்கொள்ளவில்லை. அதன் பின்னர், 1970-களில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷேட்பூரில் கத்தோலிக்க தொண்டு இயக்குநராக ஸ்டேன் சுவாமி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் பழங்குடியின மக்கள் படும் இன்னல்களை நேரில் கண்டு மனம் வெதும்பினார்.பின்னர் அவர்களுக்கு அரசாங்கத்தாலும், அதிகாரவர்கத்தாலும் மறுக்ப்பட்ட உரிமைகளை பல்வேறு போராட்டங்களை நடத்தி பெற்று தந்தார் ஸ்டேன் சுவாமி. ஜார்க்கண்ட் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காக அவர் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். இதனால் பழங்குடி மக்களின் மீட்பர் என்றும் அழைக்கப்பட்டார் ஸ்டேன் சுவாமி.

"தீவிரவாதிகளுடன் தொடர்பு"


இந்நிலையில் தான், 2018-ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலம் கோரேகானில் நடைபெற்ற ஜாதி கலவர வழக்கில் ஸ்டேன் சுவாமி மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றம்சாட்டியது. ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டதாக அவர் என்ஐஏ அதிகாரிகள் முதலில் வழக்கு பதிவு செய்தனர். ஸ்டேன் சுவாமி மட்டுமல்லாமல் இடதுசாரி சித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஸ்டேன் சுவாமி உட்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலருக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக என்ஐஏ குற்றம்சாட்டியது. மேலும், பாஜக முக்கிய தலைவர்கள் பலர் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தவும் இவர்கள் திட்டமிட்டதாக என்ஐஏ வழக்கு பதிவு செய்தது.

"எந்த தவறையும் செய்யவில்லை"

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டேன் சுவாமியை என்ஐஏ அதிகாரிகள் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு வயது 83. தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து ஸ்டேன் சுவாமி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், "பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடியதை தவிர நான் என்ன தவறு செய்தேன்? எனக் கேள்வியெழுப்பி இருந்தார். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார். அவரது மரணம் இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களின் இதயத்தில் ஈட்டியால் குத்தியது போல இருந்தது. ஸ்டேன் சுவாமிக்கு நேரந்த கதிக்காக ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்தது.

மரணத்துக்கு பின் வெளியான உண்மை

மரணத்துக்கு பின் வெளியான உண்மை

இந்நிலையில், ஸ்டேன் சுவாமியின் வழக்கறிஞர்கள் அவர் பயன்படுத்திய லேட்டாப்பை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமெரிக்காவின் போஸ்டான் நகரில் செயல்படும் 'அர்சேனல்' தடயவியல் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த நிறுவனம் அவரது லேப்டாப்பை ஆய்வு செய்து நேற்று தனது இறுதி அறிக்கையை ஆதாரப்பூர்வமாக சமர்ப்பித்தது. அதில், ஸ்டேன் சுவாமியின் லேப் டாப்பில் என்ஐஏ அதிகாரிகள் கண்டெடுத்த மாவோயிஸ்ட் தொடர்புடைய 44 ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஹேக்கர்களால் ஸ்டேன் சுவாமிக்கு தெரியாமலேயே அந்த ஆவணங்கள் அவரது லேப்டாப்பில் புகுத்தப்பட்டிருப்பதையும் ஆதாரப்பூர்வமாக 'அர்சேனல்' தடயவியல் நிறுவனம் நிரூபித்திருக்கிறது. மேலும், அந்த ஆவணங்களை அவர் ஒரு முறை கூட திறந்து பார்க்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்கூட்டியே கணித்தது எப்படி?

முன்கூட்டியே கணித்தது எப்படி?

இந்த ஆவணங்களை கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் பல முறை அவரது லேட்டாப்புக்குள் ஹேக்கர்கள் புகுத்தியுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, ஸ்டேன் சுவாமி போலீஸ் விசாரணைக்கு உள்ளாவார் என அந்த ஹேக்கர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது என 'அர்சேனல்' தடயவியல் நிறுவனம் கூறியுள்ளது. எனினும், அந்த ஹேக்கர்கள் இந்திய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களா என்ற யூகக் கருத்துகளை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை. 'அர்சேனல்' தடயவியல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஸ்டேன் சுவாமி போலியான ஆவணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. இதுதொடர்பாக என்ஐஏ உயரதிகாரிகளிடம் பல ஆங்கில ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன. ஆனால் என்ஐஏ சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எது எப்படியோ.. ஸ்டேன் சுவாமியின் ஒரு கேள்விதான் நெஞ்சை துளைக்கிறது.. "பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடியதை தவிர நான் என்ன தவறு செய்தேன்? என்பதுதான் அது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+