நெருக்கடியில் ஆட்டோமொபைல் துறை! அடித்து ஆட தொடங்கிய இந்தியா! சீனா கொஞ்சம் யோசித்து இருக்கலாம்
டெல்லி: சீனாவின் அரிய காந்தங்கள் தட்டுப்பாடு காரணமாக, இந்திய ஆட்டோமொபைல் துறை நெருக்கடியை சந்திக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில். இந்தியா சொந்தமாக இந்த காந்தங்களை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இது வெற்றிபெறும் பட்சத்தில், சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவாகும்.
இந்திய அரசு, அரிய பூமி காந்தங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ரூ.1,345 கோடியை ஒதுக்கியுள்ளது. இதனை கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் அரிய பூமி தனிமங்கள் மற்றும் காந்தங்கள் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகள் விதித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் அரிய காந்தங்கள் என்றால் என்னவென பார்ப்போம். கார், பைக்குகள் குறிப்பாக மின்சார வாகனங்கள் தயாரிப்பில் இந்த அரிய காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களுக்கான பேட்டரி தொடங்கி, பல்வேறு பாகங்களிலும் இந்த காந்தத்தின் தேவை இருக்கிறது. இந்த காந்தங்கள் உலகம் முழுவதும் கிடைத்தாலும், அவற்றை வெட்டி எடுப்பது என்பது தலைவலி பிடித்த வேலை. பூமியிலிருந்து அதை வெட்டி எடுத்து, தனியே பிரித்து, மேலும் தரமாக்கி பின்னர்தான் பயன்படுத்த முடியும்.
இந்த தலைவலி பிடித்த வேலையை சீனா சிறப்பாக செய்து வருகிறது. எனவே உலகம் முழுவதும் 90%க்கும் அதிகமாக இந்த காந்தங்களை சீனா சப்ளை செய்து வருகிறது.
அமெரிக்காவுடன் நடந்த முட்டல் மோதல் காரணமாக இந்த காந்தங்களின் சப்ளையை சீனா கடந் ஏப்ரல் முதல் நிறுத்தி வைத்திருக்கிறது. இதுதான் இப்போது பிரச்சனை. இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை தனது உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மாருதி சுசுகி தனது முதல் மின்சார காரை விரைவில் வெளியிட இருந்தது. ஆனால் இந்த காந்தங்களின் டிமான்ட் காரணமாக இந்த கார்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறது.
அதேபோல டாடா, மஹிந்திரா என பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. கார்கள் மட்டுமல்லாது மின்சார பைக்குகளை தயாரிக்கும் நிறுவனங்களும் இதே நிலைக்கு ஆளாகியுள்ளன. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்தியா சொந்தமாக காந்தங்களை தயாரிக்கும் முக்கிய முடிவை எடுத்திருக்கிறது.
தற்போது, அரிய பூமி காந்தங்களின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்களை கனரக தொழில்துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சகங்கள் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த முன்மொழியப்பட்ட திட்டம், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இரண்டையும் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கனிமங்களை வெட்டி எடுப்பது மற்றும் சுத்திகரிப்பது முதல் காந்தங்களை உற்பத்தி செய்வது வரை இதில் ஈடுபடும் நிறுவனத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திராவும், உதிரி பாகங்கள் தயாரிப்பாளரான, யுனோ மிண்டாவும் உள்நாட்டில் காந்த உற்பத்தியை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின்படி, இந்தியா 6.9 மில்லியன் டன் அளவுக்கு அரிய காந்தங்களை பூமிக்கடியில் கொண்டிருக்கிறது. சீனாவிடம் 44 மில்லியன் டன் காந்தங்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா காந்த இருப்பில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications