இந்தியா-சீனா இடையே 3-வது ஆண்டாக தொடரும் பேச்சு.. முடிவுதான் எப்போன்னு தெரியாது?
டெல்லி: இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 19-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. எல்லைகளில் இருதரப்பும் முழுமையாக படைகளை விலக்குவது தொடர்பாக நாளைய பேச்சுவார்த்தை நடைபெறக் கூடும் என தெரிகிறது.
2017-ம் ஆண்டு பூட்டானின் டோக்லாம் பீடபூமி விவகாரத்தில் இந்தியா- சீனா இடையே மோதல் ஏற்பட்டது. பல மாதங்கள் நீடித்த இந்த பதற்றம் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பின் முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையில் நிகழ்ந்த இந்த மோதல் இரு நாடுகளிடையே போர் சூழலை உருவாக்கி இருந்தது.

இதனையடுத்து இருதரப்பு ராணுவ தளபதிகள், அதிகாரிகள் என பல்வேறு நிலைப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 3 ஆண்டுகளாக இதுவரை மொத்தம் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இப்பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எல்லைகளில் பல இடங்களில் இருதரப்பு ராணுவமும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் இருதரப்பு ராணுவமும் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியா-சீனா இடையேயான 18-வது சுற்றுப் பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போது இருதரப்பும் படை விலக்கம் குறித்து விவாதித்தன. இந்நிலையில் 19-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.
இந்திய தரப்பில் மூத்த ராணுவ தளபதி ரஷீம் பாலி, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவர்களுடன் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் இணைந்து கொள்கின்றனர். சீனாவின் ராணுவ தளபதி நிலையிலான அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
நாளைய 19-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போதும் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இருதரப்பு ராணுவத்தையும் விலக்கிக் கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. 3 ஆண்டுகளாக தொடரும் இப்பேச்சுவார்த்தை எப்போது முழுமடையும் என தெரியவில்லை என்கின்றன பாதுகாப்பு துறை வட்டாரங்கள்.
அண்மையில் இருநாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். மேலும் சீனா அதிபர் ஜின்பிங் செப்டம்பர் 9-ந் தேதி இந்தியா வருகை தர உள்ளார். ஜி20 கூட்டமைப்பின் மாநாட்டை ஒட்டி ஜின்பிங், இந்தியா வருகை தருகிறார். இந்நிலையில் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications