இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது - மூன்றாவது அலை தொடங்கி விட்டதா?
இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,681 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் புதிதாக 42618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 36385 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,681 பேராக உயர்ந்துள்ளது.
Recommended Video
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா பரவிய நிலையில், அதை முழுவதுமாக தடுத்து நிறுத்துவது என்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாக உள்ளது.

கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனாவின் பிடியில் உலக மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கொரோனா முதல் அலையில் அதிகம் பாதிக்கப்படாமல் இந்தியா தப்பினாலும் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது. தினசரியும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக படிப்படியாக கட்டுக்குள் வந்தது. கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் தீவிரமடையும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 40 ஆயிரத்துக்கு மேல் பாதிப்பு பதிவாகிறது. இது மூன்றாம் அலைக்கான அறிகுறியாக இருக்கலாம் என ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 3,29,45,907 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாசிட்டிவ் சதவிகிதம் 2.50 சதவிகிதமாக உள்ளது. ஒரே நாளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் இதுவரை 4,40,225 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 36385 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,21,00,001 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.43% மாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,681 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 5.82 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 67.72 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 47 ஆயிரம், நேற்று 45 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 42 ஆயிரமாக குறைந்துள்ளது. அதே போல உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கேரளாவில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளில் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாவால் உலக நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தற்போது புதிதாகக் கண்டறியப்பட்ட 'மு'கொரோனா வகை குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட பீட்டா கொரோனா வகைக்கு இணையாக மூ கொரோனாவும் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இது குறித்து உடனடியாக கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா ஆபத்து முழுமையாக நீங்காத நிலையில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் சமூக இடைவெளியை மறந்துவிட்டு கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்தால் தொற்று மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே, எதிர்வரும் பண்டிகை காலங்களை கவனத்தில்கொண்டு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பண்டிகைகளை மக்கள் தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் ஒட்டுமொத்தமாக குறைந்து வரும் போக்கைக் காட்டினாலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் 39 மாவட்டங்களில் 10% க்கும் அதிகமாக பாதிப்பு விகிதம் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் 38 மாவட்டங்களில் இது 5 முதல் 10% வரை இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16% பேர் கோவிட் -19 தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டனர். அதே நேரத்தில் 54% பேர் முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் செலுத்திக்கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். சிக்கிம், தாத்ரா மற்றும் நகர் அவேலி, இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் 18 வயதை கடந்த அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாகவும் பூஷன் கூறியுள்ளார்.
கொரோனாவில் இருந்து முற்றிலுமாக விடுபடவில்லை என்று கூறியுள்ள ராஜேஷ் பூசன், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் வீடுகளில் இருந்தே நாம் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும். பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க வேண்டும். அதைத் தாண்டி கட்டாயம் ஒன்றுகூட வேண்டும் என்றால், அனைவரும் 2 டோஸ் வேக்சின் போட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காலத்தில் பண்டிகைகளை பாதுகாப்புடன் வீடுகளில் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா. கொரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பல்ராம் பார்கவா கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications