உற்பத்தி, சேவை துறையில் அடி! 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது நாட்டின் GDP!
டெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் துறை வாரியான வளர்ச்சி குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2024-2025 நான்காம் காலாண்டில் உற்பத்தி மற்றும் சேவை துறையில் வளர்ச்சி குறைந்திருக்கிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லா அளவுக்கு 2024-2025ம் ஆண்டில் வளர்ச்சி குறைந்திருக்கிறது.
2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 6.2% என பதிவாகியிருக்கிறது. இது அதற்கு முந்தைய காலாண்டை விட அதிகமாக இருந்தாலும், சந்தை எதிர்பார்ப்பான 6.3% வளர்ச்சியை விட சற்று குறைவு என்றே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சரிவுக்கு உற்பத்தி மற்றும் சேவை துறையில் விழுந்த அடிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது உற்பத்தித் துறையின் வளர்ச்சி நான்காம் காலாண்டில் 4.8% ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் (Q4 FY24) 11.3% வளர்ச்சியை விட குறைவாகும். அதேபோல வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மற்றும் ஒளிபரப்பு சேவைகள் என சேவை துறையை எடுத்துக்கொண்டால் 7.3% வளர்ச்சி பதிவு பதிவாகியிருக்கிறது. இது முந்தைய ஆண்டின் (Q4 FY24) 7.8% வளர்ச்சியை விட சற்று குறைவாகும்.
மொத்தமாக முழு நிதியாண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால் வளர்ச்சி கடந்த ஆண்டை விட இந்த முறை குறைந்திருக்கிறது. 2024-2025ல் மொத்த வளர்ச்சி 6.5% ஆக பதிவாகியிருக்கிறது. இதுவே 2023-2024ம் ஆண்டில் இந்த வளர்ச்சி 8.2% என இருந்தது.
2024-2025 கடைசி காலாண்டில் எந்தெந்த துறைகள் எவ்வளவு வளர்ச்சியை எட்டியுள்ள என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
மொத்த GDP - 7.4%
வேளாண் துறை - 5.4%
கனிமம் மற்றும் குவாரி - 2.5%
உற்பத்தி - 4.8%
மின்சாரம் - 5.4%
கட்டுமானம் - 10.8%
சேவை (வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு) - 6.0%
சேவை (நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவைகள்) - 7.6%
பொது நிர்வாகம், பாதுகாப்பு, மற்ற சேவைகள் - 7.8%
இதுவே முழு ஆண்டு வளர்ச்சியை பொறுத்த அளவில், மொத்த GDP கடந்த ஆண்டு 8.2% ஆக இருந்தது. இந்த ஆண்டு 6.5% என குறைந்திருக்கிறது. வேளாண்துறை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வெறும் 1.4% என்று இருந்த வளர்ச்சி இந்த ஆண்டு 3.8% என அதிகரித்திருக்கிறது. அதேபோல பொதுத்துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டு 8.8% என்கிற அளவில் இருந்தது. இந்த ஆண்டு இதே அளவில் தொடர்கிறது.
கனிமம் மற்றும் குவாரி துறை 7.1 சதவிகிதத்திலிருந்து 4.1 எனவும், உற்பத்தி 9.9லிருந்து 4.3 ஆகவும், மின்சாரம் 7.5லிருந்து 7.0 ஆகவும், கட்டுமானம் 9.9லிருந்து 8.6 ஆகவும், வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவை துறை 7.5லிருந்து 6.4 எனவும், நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவை துறை 8.4லிருந்து 7.3 எனவும் சரிவை கண்டிருக்கிறது.
வேளாண் துறை வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு சரியான பருவத்தில் பெய்த பருவமழை காரணமாக இருந்தது. அதேபோல கனிமதுறை, சர்வதேச அளவில் தேவை குறைந்ததால் வளர்ச்சியும் சரிந்திருக்கிறது. உற்பத்தி துறை சரிய காரணம் சர்வதேச அளவில் உள்ள மந்தநிலைதான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications