வசூல் வேட்டை.. மக்களிடம் வாரி குவிக்கும் டோல்கேட்கள்!. 46% வருவாய் அதிகரிப்பு! இத்தனை ஆயிரம் கோடியா?
டெல்லி: இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டில் பாஸ்ட்டேக் முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. தற்போது ஆண்டுதோறும் பாஸ்ட்டேக் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 2021யை ஒப்பிடும்போது 2022ல் பாஸ்ட்டேக் முறையில் சுங்கக்கட்டணம் செலுத்துவது என்பது 46 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில் பல ஆயிரம் கோடி வசூல் கிடுகிடுவென உயர்ந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் (டோல்கேட்) சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்த சுங்கக்கட்டணங்கள் மூலம் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி ரொக்கமாக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
இதில் சில சிரமங்கள் ஏற்பட்டன. அதாவது காலதாமதம் ஏற்பட்டதோடு, எரிபொருளும் வீணானது. மேலும் சில்லரை தொடர்பான பிரச்சனைகள் இருந்ததோடு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு பாஸ்ட்டேக் முறையை அறிமுகம் செய்தது. இது பொதுமக்களின் நேரத்தை மிச்சமாக்குவதோடு, எரிபொருள் வீணாவதையும் குறைக்கிறது.

பாஸ்ட்டேக் அறிமுகம்
இதன்மூலம் வாகன உரிமையாளர் தங்களது வங்கி கணக்கு விபரங்களை பாஸ்ட்டேக்கில் இணைத்து கொண்டு ரீசார்ஜ் செய்தால் போதும். அதன்பிறகு காரின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டீக்கரின் மேக்னட் கோட்டை டோல்கேட்டில் உள்ள கருவிகள் 'ரீட்' செய்து வருகையை பதிவு செய்து சுங்கக்கட்டணத்தை தானியங்கி முறையில் எடுத்து கொள்ளும். இது ஆன்லைனில் மின்னணு பணப்பரிவர்த்தைனையை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதோடு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத் நிற்க வேண்டிய சூழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

1,181 சுங்கச்சாவடிகளில்..
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் மொத்தம் 922 சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் வசதி நடைமுறையில் இருந்தது. இது கடந்த 2022ல் 1,181 சுங்கச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டது. இதில் 323 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளன. மேலும் பாஸ்ட்டேக் திட்டத்தின் கீழ் மாநில சுங்கச்சாவடிகள் செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 29 மாநில நிறுவனங்கள் மற்றும் ஆணையங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளன. தற்போது வரை 6.4 கோடி பாஸ்ட்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.50,855 கோடி வசூல்
இந்நிலையில் தான் ஆண்டுதோறும் பாஸ்ட்டேக் மின்னணு சுங்கச்சாவடி வசூல் என்பது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் பாஸ்ட்டேக் மூலம் மொத்தமாக ரூ.50 ஆயிரத்து 855 கோடி சுங்கக்கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 46 சதவீதம் வரை அதிகமாகும். ஏனென்றால் 2021ல் பாஸ்டேக் மூலம் ரூ.34 ஆயிரத்து 778 கோடி மட்டுமே சுங்கக்கட்டணமாக வசூலாகி இருந்தது.

பணப்பரிவர்த்தனை உயர்வு
கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் பாஸ்ட்டேக் முறையில் ஒருநாள் சராசரி வசூல் என்பது ரூ.134.44 கோடியாக உள்ளது. அதிகபட்சமாக டிசம்பர் 24ம் தேதி மட்டும் ரூ.144.19 கோடிக்கு பாஸ்ட்டேக் மூலம் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட்டேக் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை என்பது கடந்த 2021ல் 219 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையானது 2022ல் 324 கோடி என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது 48 சதவீத வளர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications