இந்தியா நுகர்வு சந்தை மட்டுமல்ல... உலக நாடுகளின் நம்பிக்கை: பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: உலக நாடுகள் இந்தியாவை ஒரு மாபெரும் நுகர்வு சந்தையாக மட்டும் பார்க்காமல், நம்பிக்கையுடனும் பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்ட நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், ஜூன் 6ஆம் தேதி முதல் வரும் 11ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜன் சமர்த் தளத்தையும், இரு அமைச்சகங்களின் 8 ஆண்டு கால பயணத்தை விளக்கும் டிஜிட்டல் கண்காட்சியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். இதுமட்டுமின்றி ரூ.1, ரூ.2, ரூ.10 மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

சுதந்திரம் குறித்து பிரதமர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரத்தின் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையை பின்பற்றியதாகவும் கூறினார். சிலர் காந்திய வழியையும், சிலர் ஆயுதங்களையும் கையில் எடுத்ததாகவும் தெரிவித்த அவர், சிலர் கடவுளின் பாதையையும், சுதந்திர தாகம் மக்கள் மத்தியில் அணையாமல் பார்த்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர்களை அனைவரின் தியாகங்களை அங்கீகரிக்கும் நாள் இது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

8 ஆண்டு பாஜக ஆட்சி
கடந்த 8 ஆண்டுகளில் பாஜக் தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு நாளும் புதிய பணிகளை கையில் எடுத்து, முயற்சி செய்து பார்த்ததாக தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். வீடு, மின்சாரம், தண்ணீர் மற்றும் இலவச மருத்துவம் மூலம் மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாக கூறினார்.

ஜன் சமர்த் தளம் பற்றி பிரதமர்
ஜன் சமர்த் தளம் என்ற கடன் இணைக்கப்பட்ட அரசின் திட்டங்களுக்கான தேசிய தளம் மூலம் மக்களை மையப்படுத்திய நிர்வாக அணுகுமுறையை நோக்கி பயணிப்பதாகவும், இதன் மூலம் இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோரின் கனவு மெய்ப்படும் என்று தெரிவித்தார்.

சர்வதேச பார்வையில் இந்தியா
கடந்த 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் உலகளவில் இந்தியா ஒரு புதிய நம்பிக்கையாக மாறியுள்ளதை பாஜக செய்துகாட்டியுள்ளதாகவும், உலக நாடுகள் இந்தியாவை ஒரு மாபெரும் நுகர்வு சந்தையாக மட்டும் பார்க்காமல், நம்பிக்கையுடனும் பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications