இனி சாலையில் ஒரு பள்ளம் கூட இருக்காது.. தன்னை தானே சரி செய்யும் "அதிசய" சாலை.. இது எப்படி சாத்தியம்
டெல்லி: நமது நாட்டில் இருக்கும் சாலைகள் தன்னை தானே சரி செய்து கொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வரத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் அமைத்து வருகிறது. இருப்பினும், பல நேரங்களில் நெடுஞ்சாலைகள் மோசமான தரத்தில் இருப்பதாகப் புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.

குழிகள்: குறிப்பாகச் சாலைகளின் நடுவே இருக்கும் குழிகள் பல நேரங்களில் மோசமான விபத்துகளைக் கூட ஏற்படுத்திவிடுகின்றன. இதற்கிடையே நாட்டில் உள்ள சாலைகளைப் பராமரிப்பதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை டிடி நியூஸ் வெளியிட்டுள்ளது. இது சாலை விபத்துகளைப் பெரியளவில் குறைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதாவது ஒரு புதிய வகை அஸ்பிஹால்ட் சாலை அமைக்கும் போது பயன்படுத்தினால்.. பின்னர் அந்த சாலையில் எதாவது பழுது, அதாவது குழிகள் ஏற்படும் போது அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் வகையில் அது இருக்குமாம். இந்த புதிய வகை அஸ்பிஹால்ட் எஃகு இழை மற்றும் பிடுமின் என்ற பெட்ரோல் கலவையால் உருவாக்கப்பட்டதாகும்.
தானாகச் சரியாகும்: சாலையில் திடீரென சிறு பள்ளம் ஏற்பட்டால் அதை பிடுமின் தானாக மூடி நிரப்பிவிடும். நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு இந்த பள்ளங்கள் முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், அதற்கு ஒரு தீர்வாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம் அந்த பள்ளத்தை மூட எத்தனை காலம் ஆகும் என்பது குறித்துச் சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சாலைகளின் ஆயுட்காலத்தை மேம்படுத்தவும் பள்ளங்களைச் சரி செய்யவும் புத்திசாலித்தனமான மற்றும் வழக்கத்திற்கு மாறான முறைகளைப் பரிசீலித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை: இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு எவ்வளவு செலவாகும் இதன் மூலம் உரியப் பலன் கிடைக்குமா என்பதை அரசு ஆய்வு செய்த பிறகே அனுமதி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த புதிய தொழில்நுட்பம் சாலைகளின் ஆயுளை அதிகரிக்கும் என்பதால் பள்ளங்களால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள் குறையும் என நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பொதுவாக விமான நிலைய ஓடுபாதைகள், வாகன நிறுத்துமிடங்களை இந்த அஸ்பிஹால்ட் மூலமாகவே அமைப்பார்கள். இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமின்றி, கட்டுமானத்தையும் விரைவுபடுத்தும். பைண்டர் மற்றும் ஃபில்லர் ஆகியவற்றை மிக்ஸ் செய்து இதை தயாரிப்பார்கள். ஒரு நீடித்த மற்றும் நம்பகமான கலவையை உருவாக்க பிடுமினுடன் இதைக் கலப்பார்கள்.
சூடான அஸ்பிஹால்ட்: இந்த சூடான அஸ்பிஹால்ட்டை விரும்பிய இடத்திற்கு பிரத்தியேக கண்டெய்னர்கள் மூலம் எடுத்துச் சென்று, அதை கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவார்கள்.. ஆனால், காலம் செல்ல செல்ல பிடுமின் சிதைவடைகிறது. இதனால் சாலைகளில் விரிசல்கள் கூட ஏற்படும். இதனா் சாலைகளில் குழிகள் ஏற்பட்டு அவை விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உருவாகிறது.
இந்த பிரச்சினையைச் சரி செய்யவே புதிய வகை ஆஸ்பால்ட்டை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையில் எடுத்துள்ளது. இதற்கு எந்தளவுக்குப் பலன் கிடைக்கும் என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications