டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்.. நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
டெல்லி: டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இன்று இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.
நேற்று இந்திய அரசியலில் மிக முக்கியமான நாள். இரண்டு துருவங்களாக இந்தியாவின் கட்சிகள் பிரிந்து தங்களின் கூட்டணி பலத்தை வெளிக்காட்டி உள்ளன. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா என்ற பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்கி உள்ளன.

தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இதற்காக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 26 கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன.
ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தின் இறுதியில் இவர்களின் கூட்டணிக்கு "இந்தியா" என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
இன்னொரு பக்கம் நீண்ட மாதங்களுக்கு பின் தனது கூட்டணி கட்சிகளை அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்தார் பிரதமர் மோடி. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை அழைத்து மோடி ஆலோசனை செய்தார். அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்த நிலையில்தான் தேசிய அளவில் இரு விதமாக கட்சிகள் பிரிந்து உள்ளன.
இதற்கு இடையில்தான் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இன்று இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது ஆகும்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன் நடக்கும் கடைசி மழைக்கால கூட்டத்தொடர் ஆகும் இது. நாளை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை 15 அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெறுகிறுது. இதில் 21 புதிய மசோதாக்களும், 7 பழைய மசோதாக்கலும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல், பொது சிவில் சட்டம், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் போன்ற பரபரப்புக்கு மத்தியில் நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது தொடர்பாக இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முக்கியமாக எதிர்க்கட்சிகளின் அமைச்சர்கள், எம்பிக்கள் ரெய்டுக்கு ஆளாக்கப்படுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப வாய்ப்புகள் உள்ளன.
இந்த கூட்டத்தொடரில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா 2021, தேவையற்ற சட்டங்களை நீக்க வழிவகுக்கும் ரத்து மற்றும் திருத்த மசோதா 2022, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா 2022, மத்தியஸ்த மசோதா 2021, அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (ஐந்தாவது திருத்தம்) மசோதா 2022, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா 2023 என 21 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த மழைக்கால கூட்டத் தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நேற்றே அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் பெங்களூரில் முக்கிய கூட்டத்தை நடத்தியதால் இதில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஒன்று கூடி பாஜகவுக்கு எதிரான வியூகத்தை வகுத்து வருகிறது. அதேபோல மறுபுறம் பாஜகவும் தனது பலத்தை நிரூபிக்க கூட்டணி கட்சிகளை திரட்டி கூட்டம் நடத்தி வருகிறது. .
எனவே அனைத்து கட்சி கூட்த்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. தற்போதைய சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தை அமைதியான முறையில் நடத்தினால் போதும் என்கிற நிலையில் பாஜக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications